Last Updated : 08 Jul, 2015 03:20 PM

 

Published : 08 Jul 2015 03:20 PM
Last Updated : 08 Jul 2015 03:20 PM

50 ஆண்டு கனவு நிறைவேறியது: தண்ணீர் தன்னிறைவில் கண்ணம்பாளையம் கிராமம்

கோவை சூலூர் அருகே உள்ளது கண்ணம்பாளையம் கிராமம். இக் கிராமம் அருகே 66 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கண்ணம்பாளையம் குளம். பருவ மழைக்காலங்களில் நொய்யல் வழி வாய்க்கால்கள் அடைக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக இக் குளத்துக்கு நீர்வரத்து தடைபட்டது.

பல போராட்டங்களை மக்கள் நடத்தியதால் அடைபட்டிருந்த வாய்க்கால் திறக்கப்பட்டு குளத்தில் நீர் நிரம்பியது. இந்த நிலை தொடரவும், குளத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தவும், ‘கண்ணம்பாளையம் குளத்துக் கமிட்டி’ 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அப்போது இந்த குளத்தில் பலர் மீன் பிடித்து விற்று வந்தனர். இதனால், மீன் பிடிக்க டெண்டர் முறை அமல்படுத்தப்பட்டது. அதில் வரும் வருவாய் மூலம் குளத்தை, குளத்துக் கமிட்டி பராமரித்து வந்தது.

இந்த குளம் அமைந்திருப்பது ஊருக்கு வடக்கு எல்லையில் சுமார் 40 அடி தாழ்வான பகுதியில். எனவே, ஊர்ப் பகுதியில் குளத்தின் நீரால் நிலத்தடி நீர் உயர வாய்ப்பில்லாத நிலை இருந்தது. இக் குளத்துக்கு அருகே ஒரு கிணறு தோண்டி, அதிலிருந்து மோட்டார் பம்ப் உதவியுடன் நீர் இறைத்து, ஊருக்கு உப்பு நீர் விநியோகம் செய்யப்பட்டது.

ஊருக்குள் சுமார் 1000 பொதுக் குழாய்களுக்கும், 2500 வீடுகளின் தனி இணைப்புகளுக்கும் உப்பு நீர், 5 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்பட்டு வந்தது. ‘தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ஊருக்கு தெற்கே 4 ஏக்கர், 16 ஏக்கர் பரப்பளவுள்ள 2 குட்டைகளில் இந்த குளத்து நீரை கொண்டு வந்து நிரப்பினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும், அதிலிருந்தே வீடுகளுக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்’ என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து வந்தது.

தன்னிறைவுத் திட்டம்

அதை நிறைவேற்ற குளத்துக் கமிட்டி பல ஆண்டுகளாக முயற்சி எடுத்தது. இறுதியில், கடந்த 2013-ல் சிறப்பு தன்னிறைவுத் திட்டம் மூலமாக இதனை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

இத் திட்டத்துக்கு, பொதுமக்கள் ரூ.25 லட்சம், மாவட்ட நிர்வாகம் ரூ.25 லட்சம், பேரூராட்சி ரூ.10 லட்சம் என பங்களிப்பு செய்ய வேண்டும். மக்கள் பங்களிப்பாக, கண்ணம்பாளையம் குளத்துக் கமிட்டி மீன் ஏலத்தில் சேமிப்பில் இருந்து வந்த தொகையில் ரூ.25 லட்சத்தை செலுத்தியிருக்கிறது. மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி பங்களிப்பு தொகையுடன் திட்டம் நிறைவேறி, கடந்த ஜூன் 25-ம் தேதி அதிகாரிகள் முன்னிலையில் இத்திட்டம் தொடங்கி 2 குட்டைகளுக்கும் நீர் விடப்பட்டுள்ளது.

‘குளத்துக்கு பக்கத்தில் கிணறு தோண்டி, 50 ஹெச்பி மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து, 1 அடி விட்டமுள்ள குழாய்கள் மூலம் 2 கி.மீ. தூரத்தில் உள்ள 4 ஏக்கர் மற்றும் 16 ஏக்கர் பரப்பளவுள்ள குட்டைகளில் தண்ணீரை நிரப்புகிறோம்.

குட்டையில் தண்ணீர் காலியாகும்போது திரும்ப நீர் ஏற்றும் பணி நடக்கிறது. இதன் மூலம் பஞ்சாயத்துக் கிணறுகள் 20, ஆழ்துளைக் கிணறுகள் 25, விவசாயிகளின் கிணறுகள் 150 ஆகியவற்றில் தண்ணீர் உயர்ந்துள்ளது. வீடுகளுக்கு தினமும் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. 1000 ஏக்கர் விவசாயமும் மீட்கப் பட்டிருக்கிறது’ என்கிறார் குளத்துக் கமிட்டிச் செயலாளர் கே.என்.சண்முகம்.



50 ஆண்டு கனவு

கண்ணம்பாளையம் பேரூராட்சித் தலைவர் முருகேசன் கூறும்போது, ‘இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆட்சியர் அலுவலகம், பவானிசாகரில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை அலுவலகம், மின்வாரிய அலுவலகங்களுக்கு நடந்த நடை கொஞ்சமல்ல.

இப்போது கிராமத்தின் 50 வருடக் கனவு நனவாகியிருக்கிறது. பக்கத்தில் உள்ள கலங்கல் ஊராட்சி, சியாமளாபுரம் பேரூராட்சி, சூலூர் பேரூராட்சி பிரமுகர்களும் இத் திட்டத்தைப் பார்த்துச் சென்றுள்ளனர். தங்கள் ஊரிலும் இத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை கேட்டுள்ளனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x