

தமிழகம் முழுவதும் இடம் மாறிய வாக்காளர்கள், இறந்தவர்கள் பெயர் அடங்கிய பட்டியல் அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்கள் அலுவலகத்தில் வரும் 18-ம் தேதி வைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. இப்பணியின்போது, பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
கள ஆய்வு மேற்கொண்டு, இடம் மாறியவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரு பதிவுகள் போன்றவற்றை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இதுபற்றிய விவரங்களை அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் அலுவலக அறிவிப்பு பலகைகளில் வரும் 18-ம் தேதி ஒட்டி வைக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் சட்டப்பேரவை தொகுதிவாரியாக இந்த பட்டியல்களை வைக்கவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு குறுந்தகடு (சி.டி) வடிவில் இப்பட்டியல் வழங்கப்படும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்'' என்று சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.