

பல்லாவரம் நகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட உள்ள திடக் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய முதலாவது அமர் வில் சென்னை குரோம்பேட்டை யை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஐஸ்வர்யா நகரில் நகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, இத்திட்டத்தை செயல் படுத்த தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில் நுட்பத் துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். இது தொடர்பாக பல்லாவரம் நகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியவை அடுத்த விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.