

காரைக்குடியில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா வீடு மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதுகுறித்து ஐந்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10-வது வீதியில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் வீடு உள்ளது. இங்கு இவரது தம்பி பாஸ்கர், அவரது மனைவி ஜானகி ஆகியோர் வசிக்கின்றனர். இவரது வீட்டுக்கு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீடு முன்பு இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். படியில் விழுந்த பெட்ரோல் குண்டுகள் உடைந்து தீப்பற்றியது. காவலுக்கு இருந்த போலீஸார் தீயை அணைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மயில்வாகனன் நேற்று முன்தினம் இரவு வந்து பார்வையிட்டார். தடய வியல் போலீஸார் அங்கு சிதறிக் கிடந்த பாட்டில்களை கைப்பற்றி சோதனை செய்த னர். பெட்ரோல், மண்ணெண்ணெ யைக் கலந்து யாரோ பாட்டிலில் அடைத்து தீ வைத்து வீசியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை சிவகங்கை மாவட்ட எஸ்பி நேற்று பார்வை யிட்டார். அவரது உத்தரவின்பேரில், காரைக்குடி டிஎஸ்பி தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில், எச்.ராஜா வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்களை கைது செய்யக் கோரி இந்து முன்னணி அமைப்பினர், பாஜகவினர் காரைக்குடி பெரியார் சிலை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நகரச் செயலாளர் அக்னி பாலா தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழிசை கண்டனம்
எச்.ராஜா வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
‘‘எச்.ராஜா வீட்டின் மீது பெட் ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். கருத்து மோதலை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். வன்முறையில் ஈடுபடக் கூடாது’’ என்றார்.
ராமகோபாலன் அறிக்கை
இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கை:
‘எச்.ராஜாவின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதை இந்து முன்னணி கண்டிக்கிறது. காவல்துறை பாதுகாப்பு உள்ள வீட்டிலேயே துணிந்து நாச வேலை செய்கிறார்கள் என்றால் காவல்துறையின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வி எழுகிறது’ என கூறியுள்ளார்.