

ஓராண்டுக்கு முன்பு மாயமாகி, 60 டன் அரிசியுடன் சுற்றி வந்த சரக்கு ரயில் வேகன் நேற்றுமுன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து அரிசி மூட்டைகள் வண்டு, புழுக்களுக்கு உணவாகி வீணாகியிருந்தன.
கடந்த ஆண்டு (2014) ஜூன் மாதம், ஹரியானா மாநிலம் சண்டிகரில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் மத்திய தொகுப்பிலிருந்து 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், சுமார் 2,500 மெட்ரிக் டன் அரிசி கும்பகோணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கும்பகோணம் வந்த ரயிலில் ஒரு வேகனை மட்டும் காணவில்லை. இதில், 1,200 மூட்டைகளில் 60 டன் பச்சரிசி இருந்தது. இதுகுறித்து இந்திய உணவுக் கழக அதிகாரிகள், கும்பகோணம் ரயில்வே துறையில் சரக்குகளைக் கையாளும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த வேகன் எங்கு உள்ளது என்பதைத் தேடும் பணியில் ரயில்வே துறையினனர் ஈடுபட்டனர்.
ஓராண்டுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட ரயில் வேகன், சென்னையிலிருந்து காலியாக வந்த சரக்கு ரயிலில் இணைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் கும்பகோணத்துக்கு வந்தது.
தகவலறிந்த திருச்சி ரயில்வே கோட்ட முதன்மை வணிக ஆய்வாளர் குமார், முதன்மை சரக்கு மேற்பார்வையாளர் தரையன் மற்றும் இந்திய உணவு கழக கும்பகோணம் மண்டல அலுவலர்கள், மத்திய உணவுக் கிடங்கு அலுவலர்கள் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
அந்த வேகனைத் திறந்தபோது கடும் துர்நாற்றம் வீசியது. அதிலிருந்த அரிசி மூட்டைகள் மக்கி, வண்டு, புழுக்களுடன் காணப்பட்டன. இதனால், அரிசி மூட்டைகளை இறக்க சுமை தூக்கும் தொழிலாளர்கள் மறுப்புத் தெரிவித்தனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி இறக்கியபோது, சுமார் 20 சதவீத அரிசி மட்டுமே சுமாராக இருந்தது தெரியவந்தது.
“கடந்த ஆண்டு சண்டிகரிலிருந்து வரும் வழியில், ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் பராமரிப்பின்போது ரயில் பெட்டி மாறியிருக்கலாம். ஓராண்டாக மழை, வெயிலில் கிடந்ததால் அரிசி மூட்டைகள் சேதமடைந்துள்ளன. அரிசியை ஆய்வு செய்த பின்னர், அதை விநியோகிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அரிசி மூட்டைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் எனவும், ரயில்வே துறையின் அலட்சியத்தால் இவை வீணாகியதாகவும் கூறப்படுகிறது.