

சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 4 இடங்களைப் பிடித்து பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் டெல்லியைச் சேர்ந்த ஐரா சிங்கால் முதலிடத்தையும், கேரளாவைச் சேர்ந்த ரீனு ராஜ் 2-ம் இடத்தையும், டெல்லி யைச் சேர்ந்த நிதி குப்தா 3-ம் இடத்தை யும், வந்தனா 4-ம் இடத்தையும் பிடித்துள் ளனர். இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 4 இடங்களையும் பெண்களே கைப்பற்றியுள்ளனர். முதலிடத்தைப் பிடித்துள்ள ஐரா சிங்கால் மாற்றுத்திறனாளி ஆவார். இவரும் நிதி குப்தாவும் ஐஆர்எஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த டி.சாருஸ்ரீ(24) அகில இந்திய அளவில் 6-வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார். தற்போது அவர் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ஐஎப்எஸ் அதிகாரியாக (இந்திய வனப்பணி) பயிற்சி பெற்று வருகிறார்.
சாருஸ்ரீயின் தந்தை எஸ்.தியாகராஜன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் குமுதா. அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் 2012-ம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் சாருஸ்ரீ இன்ஜினீயரிங் பட்டம் பெற்றார்.
ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து ‘தி இந்து’விடம் சாருஸ்ரீ கூறியதாவது:
எப்படியும் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்று தெரியும். ஆனால், அகில இந்திய அளவில் 6-வது இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தன்னம்பிக்கை, விடாமுயற்சி - இவை இரண்டும் இருந்தால்போதும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம்.
ஆனால், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. தற்போதுதான் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தில் சாரு (6-வது ரேங்க்), ஐ.எஸ்.மெர்சி ரம்யா (32), எஸ்.அருண்ராஜ் (34), டி.எஸ்.விவேகானந்த் (39), டி.பூபாலன் (80) சி.வான்மதி (152) உட்பட 110-க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், பலர் டெல்லியில் தங்கியிருந்து படித்தும் சுயமாக தாங்களாகவே படித்தும் தேர்வில் தேர்ச்சி பெற்றி ருக்கக் கூடும். எனவே, வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கலாம்.
சென்னையில் சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 22 பெண்கள் உட்பட 62 பேர் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாக அந்த மையத்தின் இயக்குநர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.