

சென்னையில் நேற்று அதிகபட்ச மாக 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மாலையில் திடீரென மேகம் திரண்டு மழை பெய்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பம் தணிந்தது.
சென்னையில் கடந்த 10 ஆண்டு களுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் உக்கிரம் நேற்றும் தொடர்ந்தது. சென்னையில் நேற்று அதிகபட்சமாக 40.3 டிகிரி செல்சி யஸ் வெப்பம் பதிவானது. மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் வங்கக்கடலில் இருந்து வரும் காற்று தடுக்கப்படுகிறது. இதனால் கடற்காற்று தாமதமாகி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 39 டிகிரி, மதுரை, நெல்லையில் 38.5, கடலூரில் 38.3, வேலூரில் 37.4, திருச்சியில் 35, சேலம், தருமபுரியில் 34.6, கோவை, கன்னியாகுமரியில் 29.6 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் காலை முதல் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும் மாலையில் திடீரென மேகம் திரண்டு மழை கொட்டியது. பல்லாவரம், கிண்டி, தாம்பரம், நுங்கம்பாக்கம், எழும்பூர், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் இரவு வரை பரவலாக மழை பெய்தது. வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்கும். அதிகபட்சம் 40 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும். ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.