

ஆதி திராவிட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுடைய நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஸ்டாலின் ஃபேஸ்புக் பதிவில் கூறுகையில், ''ஆதி திராவிட மக்களின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 18 சதவிகித நிதியில் வெறும் 2 சதவிகிதத்தை மட்டுமே தமிழக அரசு செலவு செய்துள்ளதாகவும் மீதி நிதியை வேறு பொதுவான திட்டங்களுக்கு செலவிடுவதாகவும் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி.எல்.புனியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஆதி திராவிட மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில் தமிழ்நாடு,இந்தியாவிலேயே முதல் 5 மாநிலங்களுக்குள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 6,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், 2014-ஆம் ஆண்டு மட்டும் இந்த சட்டத்தின் கீழ் 1,464 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை பதிவாகியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 571. 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாட்டில் 213 ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்த சமுதாய மக்களின் மீதான கொடுமைகளுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 70 சதவிகித வழக்குகள் ‘’ஆதாரம் ஏதும் இல்லை” என்று சொல்லி முடித்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் புனியா, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் நிரூபணம் ஆகி தண்டனை அளிக்கப்பட வழக்குகள் வெறும் 10 சதவிகிதம் தான் என்று வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும்,ஆதி திராவிட மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த பல்வேறு அம்சங்களை கண்காணிக்கும் முதல்வரின் தலைமையில் செயல்படும் மாநில அளவிலான மேற்பார்வை குழு 2013-க்கு பின் கூடவே இல்லை என்று தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார் புனியா.
அவரின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், தற்போதைய அதிமுக அரசு, ஆதி திராவிட மக்களின் நலனை பாதுகாப்பதில் தோல்வியடைந்து விட்டது என்பதையும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் எதுவும் செய்யவில்லை என்பதையும் தெளிவாக நிரூபணம் செய்து அதிமுக அரசு திறமையற்ற அரசு என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது .
எனவே,ஆதி திராவிட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுடைய நலனுக்காக மட்டுமே பயன்படுத்துமாறும்,அவர்களை மேம்படுத்தும் நலத்திட்டங்களையும்,சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் நான் அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.