Published : 01 Jul 2015 08:02 AM
Last Updated : 01 Jul 2015 08:02 AM

புதுக்கோட்டை அருகே வங்கியில் திருடியவரிடம் 4 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் உள்ள வங்கியில் 19 கிலோ தங்க நகைகளை திருடிய இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்து, சிறையிலடைத்தனர். அவரிடமிருந்து 4 கிலோ தங்க நகை களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் 2014 நவ. 29-ல் இரவு அவ்வழியே மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்ற போலீஸாரைக் கண்டதும், மூட்டை ஒன்றை தன் தலையில் சுமந்து சென்றவர், மூட்டையை அங்கேயே வீசிவிட்டு தப்பியோடினார்.

அந்த மூட்டையில் இருந்த 35 கிலோ தங்க நகைகள், அங்குள்ள சிட்டி யூனியன் வங்கியின் லாக்கரில் இருந்து திருடப்பட்டது தெரியவந் தது. மேலும், வங்கியில் நகைகளை சரிபார்த்தபோது, வங்கியிலிருந்து கூடுதலாக 19 கிலோ நகைகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஒரு வங்கியில் நடந்த திருட்டு முயற்சியின்போது, அலாரம் ஒலித்ததால் திருடர்கள் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, அங்குள்ள கண் காணிப்பு கேமராவின் பதிவு, விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு திண்டுக்கல் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனை(30) பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், திண்டுக்கல் வங்கியில் திருட முயன்றதையும், குளத்தூர் வங்கியில் திருடியதையும் கோபாலகிருஷ்ணன் ஒப்புக்கொண் டுள்ளார். இதையடுத்து, அவரிடம் கீரனூர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், குளத்தூர் வங்கியில் திருடிய 19 கிலோ நகைகளில் மனைவியிடம் 75 பவுன் நகைகளை கொடுத்ததும், மற்ற நகைகளை விற்று வீடு கட்டியதுடன் நிலம் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

சிறையில் அடைப்பு

கோபாலகிருஷ்ணனிடம் இருந்தும், விற்பனை செய்யப்பட்ட கடைகளில் இருந்தும் சுமார் 4 கிலோ நகைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து போலீஸார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து, கீரனூர் குற்றவியல் நீதிபதி சக்திவேல் முன்பு நேற்று ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

குளத்தூர் வங்கி திருட்டில் தனியொருவராகவே ஈடுபட்டதாக கோபாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். இவருக்கு மேலும் பல வங்கி கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பிருக்கலாம் என்பதால், கோபாலகிருஷ்ணனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x