Published : 22 May 2014 10:30 AM
Last Updated : 22 May 2014 10:30 AM

அரசு அலுவலகங்களை ஞாயிறு தவிர அனைத்து நாள்களிலும் திறக்கக் கோரி வழக்கு: உயரி நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து நாள்களும் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க உத்தரவிடக் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், வயலூரைச் சேர்ந்த இளமுகில், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 164 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆண்டில் 104 சனி, ஞாயிற்றுக் கிழமைகள், 18 தேசிய மற்றும் மாநில விடுமுறை நாள்கள், தற்செயல் விடுப்பு 15, ஈட்டிய விடுப்பு 15, மருத்துவ விடுப்பு 12 என ஆண்டுக்கு மொத்தம் 164 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 196 நாள்கள் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

பள்ளிகளில் கல்வி ஆண்டில் 220 முதல் 230 நாட்களும், கல்லூரிகளில் 210 நாட்களும் வேலை நாட்களாக உள்ளன. மேலை நாடுகளில் மக்கள் தொகை குறைவு, அதனால் பிரச்சினைகளும் குறைவு. வேலை நாட்களில் ஊழியர்கள் தாமதமின்றி பணிகளைச் செய்து முடிக்கின்றனர். இதனால் அந்த நாடுகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடுவது நியாயமானது.

இந்தியாவில் அந்த நிலைமை இல்லை. பட்டா, ஓட்டுநர் உரிமம், கட்டிட வரைபட அனுமதி, மின் இணைப்பு, ஓய்வூதியம், இழப்பீடு உள்ளிட்டவற்றுக்காக பொதுமக்களால் அளிக்கப்பட்ட மனுக்கள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன.

மத்திய ஊதியக்குழு 2008-ம் ஆண்டு வழங்கிய அறிக்கையில், அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ள 18 விடுமுறை நாட்களை ரத்து செய்ய வேண்டும், வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2 முதல் 8 நாட்களுக்கு மேல் செல்லக் கூடாது, 3 தேசிய விடுமுறை நாட்கள் தவிர, மற்ற அனைத்து நாட்களும் அரசு அலுவலகங்கள் திறந்திருக்க வேண்டும், மதம் சார்ந்த விடுமுறை நாளில் மற்ற மதத்தினர் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுளளது. ஆனால், இந்த பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் இதுவரை அமல்படுத்தவில்லை.

எனவே, விடுமுறை தொடர்பான மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். அதன்படி, தேசிய விடுமுறை நாட்கள் தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் அரசு அலுவலகங்களைத் திறக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x