

அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற 7,243 செவிலியர்களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னையில் நாளை தொடங்குகிறது என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மருத்து வமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற 6,792 பெண் செவிலியர்கள், 451 ஆண் செவிலியர்கள் என மொத்தம் 7,243 செவிலியர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 28-ம் தேதி நடந்தது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 5 இடங்களில் அமைக்கப் பட்ட 89 மையங்களில் நடந்த தேர்வில் 38,116 பேர் பங்கேற்றனர். சென்னையில் மட்டும் 16 மையங் களில் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வை எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் (கட் - ஆப்) மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய (எம்ஆர்பி) இணையதளத்தில் (http://www.mrb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் வரும் 22-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.
இது தொடர்பாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 7,243 செவிலியர் களை தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஒரு வாரத்துக்கு நடத்த திட்ட மிட்டுள்ளோம். எழுத்துத் தேர்வு எழுதிய அனைவரையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை. தேர்வு செய்யப்பட உள்ள செவிலியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த சாதி அடிப்படையில் மட்டுமே அழைத்து இருக்கிறோம். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்குமாறு, அவர்களுக்கு இ-மெயில் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இ-மெயிலை பார்க்கும்படி, அவர்களின் செல்போன் எண்ணுக் கும் எஸ்எம்எஸ் அனுப்பியுள் ளோம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது என்னென்ன ஆவணங் களை எடுத்து வரவேண்டும் என்று இ-மெயிலில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.