Published : 11 Jul 2015 09:10 AM
Last Updated : 11 Jul 2015 09:10 AM

மணப்பாறை அருகே கோயில் விழாவில் பலியிடப்பட்ட எருமைக் கன்றுகள்: பிராணிகள் நல ஆர்வலர்கள் கண்டனம்

திருச்சி மாவட்டம், மணப் பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட வீ.பெரியப் பட்டி ஊராட்சிக்குட்பட்டது மட்டப் பாறைபட்டி. இங்குள்ள பத்ர காளியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமைக் கன்றுகள் வெட்டி பலி கொடுக்கப்பட்டன.

இந்தக் கோயிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான எருமைக் கன்றுகளைப் பலியிடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் எருமைக் கன்றுகளைப் பலியிடும் நிகழ்ச்சி 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறுவதால், பலியிடப்படும் எருமைக் கன்று களின் எண்ணிக்கையும் ஆயிரக் கணக்கில் இருக்கும். அதன்படி, நேற்று முன்தினம் ஆயிரத்துக்கும் அதிகமான எருமைக் கன்றுகள் வெட்டி பலியிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை யாரும் செல்போனிலோ, கேமராவிலோ பதிவு செய்துவிடாதபடிக்கு விழாக் குழுவினரின் கண்காணிப்பு தீவிர மாக இருந்தது.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட எஸ்.பி. ராஜேஸ்வரியிடம் கேட்டபோது, “அதுபோன்று எதுவும் நடைபெற வில்லை” என்றார். மணப்பாறை டிஎஸ்பி ராஜராஜனும், “எருமைக் கன்றுகள் பலியிடப்படவில்லை. ஆடுகள் மட்டுமே பலியிடப்பட்டன” என்றார்.

திருச்சி மாவட்டம் தொட்டியத் தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கோயில் திருவிழாவில், எருமைக் கன்றுகளைப் பலி யிட தடை விதிக்கக் கோரி பிராணிகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தபோது, பலியிடுதல் நிகழ்ச்சி நடத்தப்படாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்போது உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதே மாவட்டத்தில் உள்ள மட்டப்பாறைப்பட்டியில் எருமைக் கன்றுகளை வெட்டி பலியிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்கின்றனர் பிராணிகள் நல ஆர்வலர்கள்.

இதுதொடர்பாக புளூ கிராஸ் அமைப்பின் சென்னை பொது மேலாளர் ஜான் வில்லியத்திடம் கேட்டபோது, “இந்தச் செயல் அப்பட்டமான மிருக வதை. தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நவீன யுகத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x