கனிமொழி மீதான ஆனந்தி சசிதரன் குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?- கருணாநிதிக்கு ஓ.பி.எஸ். கேள்வி

கனிமொழி மீதான ஆனந்தி சசிதரன் குற்றச்சாட்டுக்கு என்ன பதில்?- கருணாநிதிக்கு ஓ.பி.எஸ். கேள்வி
Updated on
2 min read

கனிமொழி மீதான இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினர் அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்குமாறு, திமுக தலைவர் கருணாநிதியை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது மாசு கற்பிப்பதைப் போலவும், அவர்களின் முதுகிலே குத்தி அவமானப்படுத்துவதைப் போலவும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மீது திமுக தலைவர் கருணாநிதி கற்பனை குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தது போல் விடுதலைப் புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தமிழக அரசு சுமத்தவில்லை. எனினும், ஊடகங்களில் இது போன்ற செய்திகள் வந்தவுடன், முதல்வர் இது பற்றி என்னிடமும், அரசு உயரதிகாரிகளிடமும் விவாதித்தார்" என்று அவர் கூறியிருக்கிறார்.

அதேவேளையில், மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடுதலைப் புலிகள் குறித்த குறிப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற விவரத்தை கூடுதல் மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்யும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும், அவரது அறிவுரையின்படி, உச்ச நீதிமன்றத்தில் இதற்கான மனு உடனடியாக தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். | விரிவான செய்திக்கு ->விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டவில்லை: முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம் |

கனிமொழி விவகாரம்

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், "2009-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக கொல்லப்படுவதற்கு கருணாநிதியின் செயல்கள் தான் காரணம் என்பதை முதல்வர் ஜெயலலிதா பலமுறை எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.

தனது உண்ணாவிரத நாடகத்துக்குப் பின்னர், இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை இலங்கை அரசு நிறுத்திக் கொண்டது என்ற கருணாநிதியின் அறிவிப்பை நம்பி பதுங்கு குழிகளிலிருந்து வெளிவந்த தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டதை யாரும் மறந்திட முடியாது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையில் இறுதிப் போர் உச்சகட்டத்தில் இருந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி இரவு 8 மணிக்கு புலிகள் இயக்கத்தின் திரிகோணமலை பகுதி அரசியல் பிரிவு தலைவர் சசிதரன் சேட்டிலைட் தொலைபேசி மூலம் கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், அப்போது விடுதலைப் புலிகளை சரணடைந்து விடும்படியும், அவர்களது விடுதலைக்கு உத்தரவாதம் தருவதாக கனிமொழி பேசியதாகவும், அதை நம்பியே சசிதரனும் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளும், மே மாதம் 18ஆம் தேதி சரணடைந்தனர் என்றும் இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றசாட்டுக்கான பதிலை கருணாநிதி முதலில் தெரிவிக்கட்டும். அதை விடுத்து கற்பனையான குற்றசாட்டுகளை தமிழக அரசு மீது தெரிவிக்க வேண்டாம் என கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in