

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு நோயை கட்டுப்படுத்தும் 2 வார விழிப்புணர்வு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் தொடங்கிவைத்தார்.
தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது. இது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை இரு வார விழிப்புணர்வு முகாம் நடத்தப் படுகிறது.
இந்த விழிப்புணர்வு முகாமின் தொடக்க விழா, சென்னைஎழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று நடந்தது. மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எஸ்.கீதாலட்சுமி விழா வுக்கு தலைமை தாங்கினார். பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) கே.குழந்தைசாமி முன்னிலை வகித் தார். சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முகாமை தொடங்கி வைத்து விழிப்புணர்வு கையேடு மற்றும் உப்பு சர்க்கரை கரைசலுக் கான பொட்டலங்களை குழந்தை களின் பெற்றோரிடம் வழங்கினார்.
இந்த விழாவில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் (கொள்ளை நோய் தடுப்பு) சி.சேகர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் சு.சுந்தரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாநகராட்சி சார்பில்..
சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமை அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.