

தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் மிகவும் தயங்குகிறார்கள். பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ்வழி ஒதுக்கீட்டில் இதுவரையில், வெறும் 63 இடங்களே நிரம்பியுள்ளன.
பொறியியல் படிப்பை தமிழ்வழியில் வழங்கும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தலா 60 இடங்கள் ஒதுக்கப்பட்டன. தமிழ்வழி மாணவர்களுக்கு வகுப்பு கள் தமிழில் நடத்தப்படுவதுடன் அவர்கள் தேர்வையும் தமிழிலே எழுதலாம். அண்ணா பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, அதன் உறுப்பு கல்லூரிகளிலும் தமிழ்வழி பொறியியல் படிப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டன.
தற்போது, தமிழ்வழியில் சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் 660 இடங் களும், மெக்கானிக்கல் இன்ஜினீ யரிங் படிப்பில் 720 இடங்களும் (மொத்தம் 1,380) உள்ளன. பொறி யியல் பொது கலந்தாய்வு தொடங்கி 6 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை யில் மெக்கானிக்கல் பிரிவில் 37 இடங்களும், சிவில் இன்ஜினீயரிங் பிரிவில் 26 இடங்களும் (மொத்தம் 63) மட்டுமே நிரம்பியுள்ளன. 1,317 இடங்கள் காலியாக உள்ளன. தமிழ்வழி பொறியியல் படிப்பை தேர்வு செய்தவர்களில் 24 பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்தாய்வு தொடங்கிய முதல் நாளிலேயே அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் உள்ள இடங்கள் வேகமாக நிரம்பிய நிலையில் தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேரும் ஆர்வம் மாணவர்களிடம் அவ்வள வாக இல்லை. தமிழ்வழி பொறியியல் படிப்புகள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் வழங்கப்பட்டாலும் கூட அதில் சேர அவர்கள் மிகவும் தயங்குகிறார்கள்.
கேம்பஸ் இன்டர்வியூ
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கேட்டபோது, “ஆங்கில வழியில் பொறியியல் முடித்த மாணவர் களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கிடைக்கும் வேலைவாய்ப் புடன் ஒப்பிட்டால் தமிழ்வழி மாண வர்களுக்கு வாய்ப்புகள் குறை வாகத்தான் இருக்கின்றன. தமிழ் வழியில் பொறியியல் படித்தால் கேம்பஸ் இன்டர்வியூ தேர்வில் வேலை கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம்கூட மாணவர் களின் தயக்கத்துக்கு காரணமாக இருக்கலாம்” என்றார்.
“கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் சிவில் இன்ஜினீயரிங் முடித்த 60 பேரில் 2 பேருக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்தது. சுமார் 30 பேர் ரூ.8 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என்ற சம்பள அளவில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தனர். இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவில் கடந்த ஆண்டைவிடவும் கொஞ்சம் அதிகம் பேர் வேலைவாய்ப்பு பெற் றனர்” என்று சிவில் இன்ஜினியரிங் துறையின் தலைவர் பேராசிரியர் கே.நாகமணி தெரிவித்தார். இதே போல், மெக்கானிக்கல் இன்ஜினீ யரிங் படிப்பை தமிழ்வழியில் படித் தவர்களில் ஏறத்தாழ 30 சதவீதம் பேருக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்ததாக அத்துறையின் தலைவர் பேராசிரியர் பி.மோகன் கூறினார். மொத்தத்தில் ஆங்கிலவழியில் பொறியியல் முடிப்பவர்களை விடவும் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ வேலை வாய்ப்பும் சரி, சம்பளமும் சரி குறைவாகத்தான் உள்ளன.
அரசு வேலை
தமிழகத்தில் தமிழ்வழியில் படித் தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப் படுகிறது. தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகளின் முதல் அணி கடந்த ஆண்டுதான் வெளியே வந்தது. அதன்பிறகு அரசுத் துறைகளில் உதவிப் பொறியாளர் நியமன அறிவிப்பு ஏதும் வரவில்லை.
இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளர் இடங்களை நிரப்புவதற்கான அறி விப்பு விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அண்மையில் அறிவித்தது. அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்கள் (கல்வித் தகுதி பொறியியல் பட்டம்) விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த இரு அறிவிப்புகள் வரும் பட்சத்தில், தமிழ்வழி பொறியியல் பட்டதாரிகள் 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலை வாய்ப்பை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ வேலைவாய்ப்பும் சரி, சம்பளமும் சரி குறைவாகத்தான் உள்ளன.