உள் விசாரணைக்கு பிறகே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

உள் விசாரணைக்கு பிறகே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தனியார் நிறுவனங்களில் புகாருக்கு ஆளாகும் ஊழியர்கள் மீது உள் விசாரணை நடத்திய பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரில் செயல்படும் ஆணுறை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தவர் முருகன். இவர் திடீரென ஓராண்டு பணிக்குச் செல்லவில்லை. பின்னர் 1998, செப். 16-ம் தேதி பணிக்குச் சென்ற அவர், அன்றைய தினமே விடுமுறையில் சென்றுவிட்டாராம். அதன் பிறகும் பணிக்குச் செல்லவில்லை.

ஒரு வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டதால் பணிக்குச் செல்ல முடியவில்லையாம். ஜாமீன் கிடைத்த பிறகு பணிக்குச் சென்றபோது, 1999, பிப். 28-ம் தேதியன்றே பணியிலிருந்து அவரை நீக்கிவிட்டதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

இதையடுத்து, தன்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடக் கோரி மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தில் முருகன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், முருகனை மீண்டும் பணியில் சேர்க்கவும், பணியில் இல்லாத காலங்களுக்குரிய பணப் பலன்களை வழங்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆணுறை தயாரிப்பு நிறுவனமும், பணியில் இல்லாத காலத்துக்குரிய பணப் பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி முருகன் தரப்பிலும், உயர் நீதிமன்றக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்விரு மனுக்களையும் விசாரித்து நீதிபதி ஆர். மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் மீது குற்றச்சாட்டு எழும்போது, அது தொடர்பாக நிறுவனத்துக்குள் விசாரணை நடத்திய பிறகே, ஊழியர் மீது இறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றச்சாட்டு குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை. நேரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர். ஊழியருக்கு விளக்கம் கேட்டு நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியதை நிரூபிக்கவில்லை. பணியில் சேரும்படி நிர்வாகம் அனுப்பிய கடிதம், தவறான முகவரிக்கு 4 முறை அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற தொழிலாளர் நீதிமன்ற உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை. முரு கனை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், அவருக்கு பணியில் இல்லாத காலத்துக்கு 50 சதவீத பணப் பலன்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட் டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in