Published : 10 Jul 2015 08:09 AM
Last Updated : 10 Jul 2015 08:09 AM

5 செயற்கைகோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது: பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த ராக்கெட் இங்கிலாந்து நாட்டின் 5 செயற்கைகோள்களை பூமிக்கு அருகில் உள்ள வட்டப் பாதைகளில் நிலைநிறுத்தும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 1999-ம் ஆண்டு முதல் வணிகரீதியில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திவருகிறது. இங்கிலாந்தின் ‘டிஎம்சி3’ வகையை சேர்ந்த 3 செயற்கைகோள்கள், சிபிஎன்டி-1, டி-ஆர்பிட்செயில் என 5 செயற்கைகோள்கள் தற்போது பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் மூலம் ஏவப்படுகின்றன. இந்த செயற்கைகோள்கள் சுமார் 3 மீட்டர் உயரம் இருப்பதால், பிரத்தியேகமாக ஒரு கருவி வடிவமைக்கப்பட்டு, ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளன. உலகிலேயே மிகவும் நம்பகமான ராக்கெட் பிஎஸ்எல்வி ஆகும். இது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது என்று இஸ்ரோ தெரிவிக்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த 5 செயற்கைகோள்களையும் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 62 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 7.28 மணிக்கு தொடங்கப்பட்டது. பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட்டின் நான்கு நிலைகளிலும் தேவைப்படும் திரவ, வாயு எரிபொருள்கள் அடைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

5 செயற்கைகோள்களையும் ஏந்தி விண்ணில் பாயும்போது பிஎஸ்எல்வி ராக்கெட்டின் மொத்த எடை 1,440 கிலோ இருக்கும். அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை வணிகரீதியில் விண்ணில் செலுத்துவது இதுவே முதல் முறை. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு 19 நிமிடம் 16 நொடியில் கடைசி செயற்கைகோள் பிரிந்துசெல்லும். அப்போது அது 654.75 கி.மீ. தூரத்தில் சென்றுகொண்டிருக்கும்.

இந்த செயற்கைகோள்கள் பூமியின் மேல் தளத்தை தினமும் படம் பிடித்துக் காட்டும். பூமியின் மண் வளம் உள்ளிட்ட பிற ஆதாரங்கள், நகர்ப்புற உள் கட்டமைப்பு, பேரிடர் கண்கா ணிப்பு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு இவை உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x