Published : 27 Jul 2015 05:32 PM
Last Updated : 27 Jul 2015 05:32 PM

போதிய வகுப்பறை வசதி இல்லாததால் மைதானத்தில் அமர்ந்து படிக்கும் திருப்பூர் பள்ளி மாணவர்கள்

போதிய வகுப்பறை வசதி இல்லாததால், மைதானத்தில் அமர்ந்து படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் திருப்பூர் நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்.

திருப்பூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, 1968-ம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது.

2001-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும், 2011-ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தரம் உயர்வுக்கேற்ப தேவையான கட்டிட வசதிகளில் இல்லை என்கின்றனர் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

திருப்பூர் நெசவாளர் காலனி, திருநீலகண்டபுரம், எம்.எஸ்.நகர், அம்பேத்கர் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பனியன் தொழிலாளர்கள், தங்களது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்துள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டிட வசதி ஏற்படுத்தாததால் மாணவ, மாணவிகளை மைதானத்தில் அமரவைத்து, பாடம் சொல்லித் தருவது வேதனை அளிக்கிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகமும் கவனம் செலுத்துவதில்லை.

தற்போது ஆடி மாதக் காற்று வீசுவதாலும், மைதானத்தில் உள்ள மண் சுழன்றடிப்பதாலும் ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனிக்க முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டில் உள்ள சில கட்டிடங்களில் ஓடுகள் சிதிலமடைந்திருப்பதால், மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்துவிடுகிறது.

இதனால், மைதானத்தில் அமர்ந்து படிக்கும் மாணவர்களுக்கும், மழைநீர் புகும் வகுப்பறை மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வகுப்பறை வசதி இல்லாததால், அறிவியல் ஆய்வகம் வகுப்பறையாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், 1,300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளி வளாகத்தில் வெறும் 8 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மநாபன் கூறும்போது, “10-க்கும் மேற்பட்ட வகுப்புகளுக்கு தேவையான கட்டிட வசதி, போதிய கழிப்பறை வசதிகள் உடனடியாக செய்துதரப்பட வேண்டும். இருக்கும் 8 கழிப்பறைகளைக்கூட முறையாக சுத்தப்படுத்துவதில்லை. பள்ளியின் சிறிய மைதானத்திலேயே பல வகுப்புகளைச் சேர்ந்த 400 பேர் அமர்ந்து படிப்பதால், விளையாட்டிலும் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை. ஆசிரியர் அமர்வதற்குகூட, இருக்கை வசதி இல்லை என்பது தான் உண்மை நிலை” என்றார்.

மாநகராட்சி உதவி ஆணையர் வாசுக்குமார் கூறும்போது, “எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிதி கிடைத்துள்ளது. மாநகராட்சி சார்பில் மாணவ, மாணவியருக்கு தேவையான வசதிகள் செய்துதரப்படும்” என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x