தூத்துக்குடி துறைமுகம் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 1,000 ஏக்கர் நிலம் நீக்கம்: அலையாத்தி காடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல்

தூத்துக்குடி துறைமுகம் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 1,000 ஏக்கர் நிலம் நீக்கம்: அலையாத்தி காடுகளுக்கு பெரும் அச்சுறுத்தல்
Updated on
2 min read

தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் 1,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இது, அலை யாத்தி காடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சிப் பணிக்காக வருவாய்த் துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கடந்த 1918-ல் அரசாணை 22-ன் படி துறை முக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டன. இதில் முள்ளக்காடு பகுதியில் உள்ள 1129.89 ஏக் கர் நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, கடந்த 3.11.1923-ல் அறிவிக்கப்பட்டது.

வளர்ச்சி பணிக்கு தடை

இந்த நிலம் தூத்துக்குடி துறை முகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அந்த நிலத் தில் வளர்ச்சி பணிகளை செய்ய முடியாத நிலை இருந்தது. கடந்த 1980-க்கு பிறகு இந்த நிலத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப் பட்டன. ஒவ்வொரு முறையும் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்பதால், பாதுகாக் கப்பட்ட வனப் பகுதியில் இருந்து இந்நிலத்தை நீக்கி அறிவிப்பு செய்ய வேண்டும் என, துறைமுக நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.

457.25 ஹெக்டேர் நீக்கம்

மத்திய வனத்துறை அதிகாரிகள் 2013-ம் ஆண்டு ஆய்வு நடத்தி, இந்த நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனத்துறை பகுதியில் இருந்து நீக்க அனுமதி அளித்தனர். இதுதொடர்பாக தமிழக வனத்துறைக்கு, மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் 2014-ம் ஆண்டு அனுமதி அளித்தன. தற்போது முள்ளக்காடு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 457.25 ஹெக்டேர் (1129.89 ஏக்கர்) நிலத்தை நீக்கி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், இங்கு அலையாத்தி காடுகள் அமைந்துள்ள 21.73 ஹெக்டேர் (53.70 ஏக்கர்) நிலத் துக்கு மட்டும் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. இந்த பகுதி பாது காக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரிக்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

வன அலுவலர் விளக்கம்

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ராஜூ கூறும்போது, `இந்த அறிவிக்கையால் அலை யாத்தி காடுகளுக்கு பாதிப்பு இல்லை. அவற்றை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அப்பகுதியில் கூடு தலாக அலையாத்தி மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

துறைமுக நிலம்தான்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபைத் தலைவர் எஸ். ஆனந்த சந்திரபோஸ் கூறும்போது, `அந்த நிலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சொந்தமானதுதான். வனத்துறை நிலம் என ஆவணத்தில் மட்டும் பதிவாகி இருந்தது. அதனை முறைப்படி துறைமுகத்துக்கு மாற்றும் நடவடிக்கைதான் தற் போது நடந்துள்ளது. இதன் மூலம் அந்த நிலத்தில் இனிமேல் துறைமுகத்தின் வளர்ச்சிப் பணிகளை எந்த தடையும் இல்லா மல் செய்ய முடியும்’ என்றார்.

இயற்கை பேரிடர்

சுற்றுச்சூழல் ஆர்வலர் மா.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, `இந்த இடத்தை துறைமுகத்திடம் இருந்து மீட்டு, வனத்துறை பராமரிக்க வேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அந்த நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் இயற்கை அரண்களாக அலையாத்தி காடுகள் விளங்குகின்றன. துறைமுக வளர்ச்சிப் பணிகளால் அலையாத்தி காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்த இடம், துறைமுக இடமாக மாற்றப்பட்டிருப்பது அலையாத்தி காடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அலையாத்தி காடு களை பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in