

ரயில் மோதியதில் இடுப்பு எலும்பு நொறுங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவரை காப்பாற்றி சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜய்குமார் சிங் (55). கடந்த மாதம் 30-ம் தேதி பைக்கில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, இவர் மீது ரயில் மோதியது. இதில் விஜய்குமா ரின் இடுப்பு எலும்பு உடைந்து நொறுங்கியது. முதுகு தண்டுவடத் திலும் முறிவு ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 8-ம் தேதி சென்னைக்கு கொண்டு வந்து அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி னிவாசன் தலைமையிலான குழுவினர் சுமார் 5 மணி நேரம் போராடி விஜய்குமார் சிங்கின் நொறுங்கிய இடுப்பு எலும்பை அறுவை சிகிச்சை மூலம் மறுசீரமைப்பு செய்தனர். முறிவு ஏற்பட்ட மற்ற எலும்புகளையும் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்தனர். உடலில் இருந்த காயங்களுக்கும் சிகிச்சை அளித்தனர்.
இதுதொடர்பாக டாக்டர் பாலாஜி ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட விஜய்குமார் சிங், அறுவை சிகிச்சை முடிந்த 72 மணி நேரத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து சொந்த ஊருக்கு செல்ல தயாராகிவிட்டார். விபத்தில் சிக்கி காயமடைபவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை என்பது மிகவும் முக்கியமானது. இதற்கான அனைத்து வசதிகளும் அப்போலோ மருத்துவமனையில் உள்ளது. அதனால்தான் விஜய்குமார் சிங் விரைவாக குணமடைந்துள்ளார்.