வாகனத்தில் வழக்கறிஞருக்கான ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலும் சாலை விதிகளை மீறினால் நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வாகனத்தில் வழக்கறிஞருக்கான ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலும் சாலை விதிகளை மீறினால் நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வாகனத்தில் வழக்கறிஞர் ‘ஸ்டிக்கர்’ ஒட்டிக்கொண்டு சாலை விதிகளை மீறுவோர் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் வி.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஆந்திரம், கர்நாடக மாநில பல்கலைக்கழகங்களில் இருந்து குறைந்த கட்டணத்தில் எல்எல்பி பட்டம் பெற்று வருபவர்கள் தமிழக பார் கவுன்சிலில் பதிவு செய்யத் தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல் களை உருவாக்க பார் கவுன்சி லுக்கு உத்தரவிட வேண்டும். வழக்கறிஞராக இல்லாதவர்கள் அவர்களது வாகனங்களில் வழக்கறிஞருக்கான ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

வழக்கறிஞர்கள், நீதிமன்றத் தின் முக்கிய அங்கத்தினர்கள். வாகனங்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்துவதற்காகவே ‘ஸ்டிக்கர்’ வழங்கப்படுகிறது. ஆனால், சட்டத்தை மீறுவதற் காக ஸ்டிக்கரைப் பயன்படுத்தக் கூடாது. ஹெல்மெட் போடாமல் வாகனத்தில் செல்லும்போது தப்பித்துக் கொள்வதற்காகவும், சாலை விதிகளை மீறுவதற்கா கவும், வேறு விதிமீறலுக்காகவும் ஸ்டிக்கர் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனவே, வழக்கறிஞருக்கான ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்டிக் கொண்டு விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உரிமை உண்டு.

பிற மாநிலங்களில் இருந்து குறைந்த கட்டணத்தில் இளங் கலை சட்டப் படிப்பு வாங்கி வந்தால் நீதித்துறையே நிலைகுலைந்து விடும். எனவே, இதை சரிசெய்ய இந்திய பார் கவுன்சில், இளங்கலை சட்டப்படிப்புக்கான சான்று வைத்திருப்போரிடம் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உதவ வேண்டும்.

பள்ளி, கல்லூரிக்குப் போகாத வர்கள்கூட வழக்கறிஞராகி விடுவதாகவும், சமூக விரோதிகள் இத்துறையில் நுழைவது வேதனையளிக்கிறது என்றும் மனுதாரர் கூறியுள்ளார். இந்த நிலையைப் போக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உரிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in