Published : 02 Jul 2015 02:16 PM
Last Updated : 02 Jul 2015 02:16 PM

மது அருந்த பணம் கேட்ட தம்பி வெட்டிக் கொலை: மகனுடன் பெண் கைது

மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்த தம்பியை ஓட ஓட விரட்டி கொலை செய்த பெண் மற்றும் அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

திருப்பத்தூர் அடுத்த அரவபட்றபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா (37). இவரது கணவர் இறந்துவிட்டார். சசிகலா தனது மகன் விஜயசேகருடன் (20) அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். சசிகலாவின் தம்பி விஜயகுமார் (27), குனிச்சி அருகே சைக்கிள் கடை நடத்தி வந்தார். திருமணம் ஆகாத விஜயகுமார், அக்கா சசிகலாவின் மகள் கவிதாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். தம்பிக்கே மகளை திருமணம் செய்து கொடுப்பதாக முதலில் வாக்குறுதி அளித்த சசிகலா, விஜயகுமாருக்கு மது பழக்கம் இருப்பது தெரிந்த பின்னர், தன் முடிவை மாற்றினார்.

இதைத்தொடர்ந்து வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கவிதாவை திருமணம் செய்து கொடுத்தார் சசிகலா. இதனால், அக்கா- தம்பிக்கு இடையே விரோதம் ஏற்பட்டது. தினமும் மது அருந்திவிட்டு, சசிகலா வீட்டுக்கு சென்று விஜயகுமார் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சசிகலா தன் மகன் விஜயசேகருடன் வீட்டில் இருந்தார். அப்போது மது போதையில் அங்கு வந்த விஜயகுமார், மேலும் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்தார்.

இதனால், சசிகலா தனது மகன் விஜயசேகருடன் சேர்ந்து தம்பியை விரட்டினார். ‘மகளை திருமணம் செய்து கொடுப்பேன் எனக்கூறி ஏமாற்றி விட்டாய், அதனால் தான் நான் குடிக்காரன் ஆனேன்’ எனக் கூறி விஜயகுமார் சண்டையிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சசிகலா மற்றும் அவரது மகன் விஜயசேகரும் சேர்ந்து வீட்டில் இருந்த அரிவாளால் விஜயகுமாரை சரமாரியாக வெட்டினர்.

வெட்டுக் காயங்களுடன் தெருவில் விஜயகுமார் ஓடினார். அவரை துரத்திச் சென்று சரமாரியாக சசிகலா வெட்டியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே விஜயகுமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து வந்த தகவலின்பேரில் கந்திலி போலீஸார் அங்கு சென்று விஜயகுமார் சடலத்தை மீட்டனர். பின்னர், சசிகலா மற்றும் அவரது மகன் விஜயசேகர் ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயசேகர் வாணியம்பாடியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x