Last Updated : 06 Jul, 2015 10:15 AM

 

Published : 06 Jul 2015 10:15 AM
Last Updated : 06 Jul 2015 10:15 AM

தாயாரின் அறுவை சிகிச்சைக்காக தவறு செய்துவிட்டேன், சிறுவனை கடத்திய என்னை அடித்துக் கொன்றுவிடுங்கள் - முன்னாள் டிஎஸ்பி மகன் கதறல்

‘அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவை என்பதால் பள்ளி சிறுவனை கடத்திவிட்டேன். தவறு செய்த என்னை அடித்துக் கொன்றுவிடுங்கள்’ என்று ஓய்வு பெற்ற டிஎஸ்பி மகன் போலீஸ் அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

சென்னை போரூர் மதனந்த புரத்தில் பள்ளி சிறுவன் அரவிந்த ராஜை (11) கடந்த 2-ம் தேதி கடத்திய பாலா என்கிற பால மகேந்திரன் (26), அவனது பெற் றோரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினார். கடந்த 3-ம் தேதி பட்டாபிராம் இந்து கல்லூரி அருகே பணத்தை வாங்கும்போது பாலாவை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, பள்ளி சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டியது ஏன் என்பது குறித்து விசாரணையில் போலீஸ் அதிகாரிகளிடம் பாலா கூறியதாவது:

என் அப்பா ஏழுமலை, ஓய்வு பெற்ற போலீஸ் டிஎஸ்பி. அம்மா சுமதி. நான் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், சென்னை எம்ஐடியில் எம்பிஏவும் படித்தேன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்தில் ரூ.12 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்தேன். பிறகு, அங்கிருந்து நின்றுவிட்டேன்.

அண்ணன்கள் 2 பேரும் சாப்ட்வேர் இன்ஜினீயர்கள். தரமணி டைடல் பார்க்கிலும், சிறுசேரியிலும் வேலை செய்கின்றனர். கை நிறைய சம்பாதிக்கின்றனர். ஒரு அண்ணன் ரூ.2.50 லட்சத்துக்கு புதிதாக பைக் வாங்கியிருக்கிறார். எங்கு தேடியும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. வீட்டிலும் மரியாதை இல்லை.

அம்மா - அப்பாவுக்கு இடையே சண்டை. அவர்கள் சரியாக பேசிக் கொள்வதில்லை. உடல்நலக் கோளாறால் அம்மா அவதிப்பட்டு வருகிறார். அறுவை சிகிச்சை செய்தால் குணப்படுத்திவிடலாம். அப்பா, அண்ணன்கள் யாரும் அம்மாவை கவனிப்பதில்லை. எனக்கும் அதே உடல்நல பாதிப்பு இருக்கிறது. அதைப் பற்றி நான் கவலைப்பட்டது இல்லை. அம்மாதான் என் மீது எப்போதும் அன்பாக இருப்பார். அவருக்கு எப்படியாவது அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூரில் என்னுடன் வேலை பார்த்த நண்பர் தற்போது போரூரில் வேலை செய்கிறார். அவரைப் பார்த்து ஏதாவது வேலை கேட்கலாம் என்ற எண்ணத்தில்தான் போரூருக்கு சென்றேன். அப்போது, வீட்டில் இருந்து பள்ளிக்கு சிறுவன் புறப்பட்டுச் சென்றதை பார்த்தேன். ‘பெரிய வீடு, பணக்கார சிறுவன். இவனைக் கடத்தினால் பணம் கிடைக்குமே’ என்று தோன்றியது. அம்மா அறுவை சிகிச்சைக்கு பணம் தேவை என்பது மட்டுமே முக்கியமாக இருந்ததால், ஏதோ ஒரு தைரியத்தில் சிறுவனை கடத்திவிட்டேன்.

இதுபோன்ற மோசமான எண்ணம் எனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. நான் செய்தது மிகப்பெரிய தவறு. என்னால் என் குடும்பத்துக்கு தீராத அவப்பெயரும் அவமானமும் ஏற்பட்டுவிட்டது. என் மீது அன்பும், பாசமும் கொண்டுள்ள அம்மாவை கஷ்டப்படுத்திவிட்டேன். என்னால் எல்லோருக்கும் கஷ்டம். வாழவே பிடிக்கவில்லை. தயவு செய்து என்னை அடித்துக் கொன்றுவிடுங் கள். விஷம் இருந்தால் கொடுங்கள். சாப்பிட்டு இறந்துவிடுகிறேன். நான் உயிரோடு இருக்க விரும்பவில்லை.

இவ்வாறு கதறி அழுதபடியே பாலா கூறியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளி சிறுவனை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதால் பெரிய கடத்தல் கும்பல் என்று நினைத்தோம். அதனால்தான் 16 தனிப்படைகள் களத்தில் இறங்கின. நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. பிடிபட்டதில் இருந்து அழுதுகொண்டே இருந்தார். பார்க்கவே பாவமாக இருக்கிறது. இவர் செய்த காரியதால், குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். நன்கு படித்து, வேலை பார்த்த அவரது வாழ்க்கையும் பாழாகிவிட்டது.

சிறுவனின் தாயை தொடர்பு கொண்டு பாலா பேசிய செல்போன் உரையாடலை கேட்டோம். அப்போதும், பாலா அநாகரிகமாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மேடம், மேடம் என்கிறார். பணத்தை எப்படியாவது கொஞ்சம் சீக்கிரம் தந்துவிடுங்கள் என்று கெஞ்சுகிறார். இன்னும் ஒருநாள் ஆகியிருந்தால், பயந்துபோய் அவரே சிறுவனை வீட்டில் கொண்டுவந்து விட்டிருப்பார் போல. அந்த மனநிலையில்தான் பாலா இருந்திருக்கிறார். 2 நாளில் பாலாவும், சிறுவனும் நண்பர்களாகவே மாறிவிட்டனர்.

இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x