Published : 27 Jul 2015 09:59 AM
Last Updated : 27 Jul 2015 09:59 AM

மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்தது: அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,052 இடங்கள் நிரம்பின

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 22-ம் தேதி முதல் 25-ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு 10 மணி வரை நடந்தது.

4 நாட்கள் நடந்த கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 109 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 25 பிடிஎஸ் இடங்கள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 911 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 1,052 இடங்கள் நிரப்பப்பட்டன.

இரண்டு கட்ட கலந்தாய்வின் முடிவில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்த 85 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட் டுக்கான 912 பிடிஎஸ் இடங்களில் 911 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவன் கூறும்போது, “இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை கடிதம் பெற்றவர்கள் வரும் 31-ம் தேதிக்குள் உரிய கல்லூரியில் சேர வேண்டும். மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடக்கும். 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 398 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 15 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப அளிக்கப்படும் இடங்கள் மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரி யில் காலியாக உள்ள ஒரு பிடிஎஸ் இடம் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x