

இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.1220.23 கோடி கடன் உள்ளதாக அரசிடம் குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
14-வது மத்திய நிதி ஆணையத்தின் ஒதுக்கீடுகளை மாநிலத்துக்கு அறிவிக்கும் தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2015-16 நிதியாண்டு முதல் 2019 - 2020 நிதியாண்டு வரையில் ரூ.6,585.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சிகளுக்கு 40 சதவீதம், நகராட்சிகளுக்கு 31 சதவீதம், பேரூராட்சிகளுக்கு 29 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதன்படி மாநகராட்சிகளுக்கு ரூ.2,634.33 கோடி, நகராட்சிகளுக்கு ரூ.2,041.61 கோடி, பேரூராட்சிகளுக்கு ரூ.1,909.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில நிதி ஆணைய ஒதுக்கீடுகளில் சென்னை மாநகராட்சியின் தொகையில் 10 சதவீதம் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்துக்கு ஒதுக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு மார்ச் 31-ம் தேதி வரை ரூ.1,220.23 கோடி கடன் உள்ளதால் இந்த நிதி போதாது என்றும் 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். குடிநீர் வாரியம் ரூ.4,247 கோடி செலவில் குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் சென்னை மாநகராட்சி ஆணையர், விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கான திட்டங்கள், பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் 90 சதவீதத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அனைத்து தரப்பையும் கவனமாக பரிசீலித்த பிறகு, சென்னை மாநகராட்சியின் தொகையிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஏற்கெனவே அறிவித்த 10 சதவீதத்தை மட்டுமே வழங்க முடியும் என்று அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.