காவிரி நடுவர் மன்றத்துக்கு புதிய தலைவர்: தமிழக விவசாயிகள் வரவேற்பு

காவிரி நடுவர் மன்றத்துக்கு புதிய தலைவர்: தமிழக விவசாயிகள் வரவேற்பு
Updated on
2 min read

காவிரி நடுவர் மன்றத்தின் புதிய தலைவராக உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி பி.எஸ்.சௌகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அரசின் நீர்வளத் துறை வெளியிட்டுள்ளது. நீண்ட காலமாக காலியாக இருந்த தலைவர் பதவிக்கு இப்போது நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதை தமிழக விவசாயிகள் சங்கங்கள் வரவேற்றுள்ளன.

கடந்த 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், 1991-ம் ஆண்டில் இடைக்கால உத்தரவையும் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி உத்தரவையும் பிறப்பித்தது. இந்த இறுதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் நடுவர் மன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்த அதே நேரத்தில், இறுதி உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.

நடுவர் மன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்து விட்டு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களையும் தாக்கல் செய்தது போன்ற காரணங்களால் நடுவர் மன்றத்தில் விசாரணை முடங்கியது. இதற்கிடையே நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்த நீதிபதி என்.பி.சிங், தனக்கு உடல் நிலை சரியில்லை என காரணம் கூறி கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் தலைவர் பதவியில் யாரும் நியமிக்கப்படாததால், காவிரி நடுவர் மன்றத்தில் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி பி.எஸ்.சௌகானை காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக நியமனம் செய்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மே 13-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. நீதிபதி சௌகான் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து வரும் ஜூலை 1-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதன் பிறகு காவிரி நடுவர் மன்றத் தலைவராக அவர் பதவியேற்பார்.

இந்த நியமனம் குறித்து தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் கூறியதாவது:

காவிரியில் தமிழக விவசாயிகளுக்கு உள்ள தண்ணீர் உரிமை தொடர்பாக பல்லாண்டு காலமாக சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி உத்தரவைப் பிறப்பித்தது. எனினும் அதன் பிறகும் கூட தமிழக விவசாயிகளுக்கு நீதி கிடைக்கவில்லை. இறுதி உத்தரவுப் பிறப்பித்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 2013-ல்தான் அந்த உத்தரவு மத்திய அரசின் அரசிதழிலேயே வெளியிடப்பட்டது.

இதற்கிடையே நடுவர் மன்ற இறுதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும், நடுவர் மன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணையின்றி கிடக்கின்றன.

இந்த சூழலில் நீண்ட காலமாக காலியாக இருந்த காவிரி நடுவர் மன்ற தலைவர் பதவிக்கு நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதை தமிழக விவசாயிகள் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். விவசாயிகளின் பாதிப்புகளை உணர்ந்து நடுவர் மன்றத்தின் புதிய தலைவர், சீராய்வு மனுக்களை விரைவாக விசாரித்து உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

நடுவர் மன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை புதிதாக அமையவுள்ள மத்திய அரசு காலதாமதமோ அல்லது பாரபட்சமோ இல்லாமல் விரைவாக அமல்படுத்திட வேண்டும் என்றார் ரங்கநாதன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரான கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:

நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள சீராய்வு மனுக்கள் பைசல் செய்யப்பட்டால்தான் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்த முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனல் நடுவர் மன்றத்தில் தலைவரே இல்லாததால் இதுநாள் வரை விசாரணை நடைபெறவில்லை.

இந்த சூழலில் தற்போது தலைவர் பதவி நிரப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தனது ஆட்சிக் காலத்தின் கடைசி நேரத்தில் மிகவும் காலம் கடந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ள போதிலும், தமிழக விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in