

தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலையை நேர்மையாக விசாரிப்பதற்கு, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் கவுரக் கொலைகள் தடுப்புச் சட்டம் கொண்டு வருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 13-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் அண்மைக்காலமாக கவுரவக்கொலைகள் என்னும் பெயரில் சாதிவெறியர்கள் நடத்தும் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை 23ஆம் நாள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ஓமலூரைச் சார்ந்த கோகுல்ராஜ் என்னும் தலித் இளைஞர் சாதிவெறியர்களால் கொடூரமான முறையில் தலை துண்டிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்த பெண்ணுக்கும் அவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாக அறிந்த சாதிவெறிக் கும்பல் அவரைக் கடத்திச்சென்று அச்சுறுத்தி, 'தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக' பேசவைத்து அந்தக் காட்சியை பதிவுசெய்து அலைபேசிகளில் பரவ விட்டனர். தலை துண்டிக்கப்பட்ட கோகுல்ராஜ் உடலை பள்ளிப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு அந்தக் கும்பல் தலைமறைவாகிவிட்டது.
கோகுல்ராஜின் உடல் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததால் அதனை தற்கொலை வழக்காக காவல்துறையினர் பதிவுசெய்தனர். கோகுல்ராஜ் கடத்திச்செல்லப்பட்டார் என்கிற தகவலை கோகுல்ராஜுடன் பழகி வந்த தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்த பெண் ஒருவர் கோகுல்ராஜின் தாயாருடன் காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார். அதனையொட்டி காவல்துறை கடத்தல் வழக்குப் பதிவுசெய்தது. ஆனால், இரண்டு வார காலமாக குற்றவாளிகள் யாரையும் காவல்துறை கைதுசெய்யவில்லை.
விடுதலைச் சிறுத்தைகளும் கோகுல்ராஜ் குடும்பத்தினரும் நான்கு நாட்கள் தொடர் உண்ணாநிலை அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னரே காவல்துறை அவ்வழக்கை கொலை வழக்காக மாற்றியது. பின்னர், குற்றம்சாட்டப்பட்ட முதல் குற்றவாளியைத் தவிர வேறு சிலரை காவல்துறை கைது செய்யதுள்ளது. இன்னும் முக்கியக் குற்றவாளியை கைது செய்யவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமாக படுகொலை நடந்துள்ள நிலையிலும் தமிழகத்தில் தலித் அமைப்புகள் மற்றும் இடதுசாரிகளைத் தவிர வேறு யாரும் இதனை மனிதாபிமானத்தின் அடிப்படையில்கூட கண்டிக்கவில்லை என்பது 'கொடுமையிலும் கொடுமையாக' உள்ளது. தமிழகம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்னும் பேரச்சம் உருவாகிறது.
அத்துடன், தமிழக அரசு தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் படுகொலைகள் மற்றும் இதர வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லையென்பது வேதனையளிக்கிறது. தென்மாவட்டங்களில் அடுக்கடுக்கான படுகொலைகள், தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தேறி வருகின்றன. அவற்றில் கவுரவப் படுகொலைகள் என்னும் ஆணவப் படுகொலைகளும் அடங்கும்.
தற்போது வடமாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் இவை அதிகரித்துவருகின்றன. இது தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது தமிழகத்தில் அப்படிப் படுகொலைகள் நடக்கவில்லை என்று அரசுத் தரப்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கூறினார். அந்த வகையில், தமிழகத்தில் அவ்வாறு ஆணவக்கொலைகள் ஏதும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் காவல்துறையினரும் பிடிவாதமாக கோகுல்ராஜ் படுகொலையைத் திசைதிருப்ப முயற்சித்தனர்.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகளின் தொடர் போராட்டத்தால் தற்போது அவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது என்றாலும் காவல்துறையினர் அவ்வழக்கை நேர்மையாக விசாரிப்பார்கள் என்று நம்பமுடியவில்லை. எனவே, கோகுல்ராஜ் படுகொலை வழக்கை மையப் புலனாய்வு (சி.பி.ஐ.) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.
மேலும், ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றவேண்டும் எனவும் தமிழக அரசையும் இந்திய அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு மைய அரசு சட்டம் கொண்டுவரவேண்டுமென இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநில அரசுகள் மைய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளன. ஆனால், தமிழக அரசு மட்டும் இது குறித்து மைய அரசுக்கு எந்தத் தகவலையும் அளிக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
எனவே, தமிழக அரசு உடனடியாக 'ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம்' கொண்டுவர மைய அரசுக்குப் பரிந்துரை செய்யவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் 13.7.2015 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.