

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த 9,710 வாக்குகள் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு உத்வேகம் அளித்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட சி.மகேந்திரனுக்கு 9,710 வாக்குகள் கிடைத்துள்ளன. தேர்தல் தொடங்கியது முதல் போட்டிக்கு சம வாய்ப்புகளற்ற நிலையே இருந்தது. முதல்வர் போட்டியிடுவதற்காகவே இத்தொகுதியின் எம்எல்ஏ ராஜினாமா செய்தார். இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த காலத்துக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
அனைத்து அமைச்சர்களும் தொகுதிக்குள் இருந்துகொண்டு தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினர். அரசு நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டன. பணபலம், அதிகார துஷ்பிரயோகம் அனைத்தையும் மீறி இடதுசாரி வேட்பாளருக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கும் மாசுமருவற்ற வாக்குகளாகும். தமிழகத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முனைப்புள்ள மக்கள் சக்தி இருப்பதையே இது காட்டுகிறது.
நடுநிலையாக நடந்துகொள்ள வேண்டிய தேர்தல் ஆணையம், கள்ள ஓட்டு போடுவதை கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஒரு வாக்குச்சாவடியில் 100 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகும் அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருந்தன.
இவை அனைத்தையும் மீறி சி.மகேந்திரனுக்கு கிடைத்துள்ள வாக்குகள், இடதுசாரிகளின் மாற்று கொள்கைகளை முன்வைக்கவும், சமூக ஒடுக்குமுறைகள் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தவும் தேவையான உத்வேகத்தை அளித்துள்ளது. தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க இன்னும் முனைப்புடனும், ஊக்கத்துடனும் இடதுசாரி கட்சிகள் செயல்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.