

தமிழகத்தில் மற்ற கட்சிகள் மீதுள்ள வெறுப்பினால், சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
திருப்பூரில் வரும் 17-ம் தேதி சட்டமன்ற வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான பணிகளில் அந்த இயக்கத் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறும்போது; ‘‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாவட்டத்துக்கு ஒரு வேட்பாளரை நிறுத்த உள்ளோம். முதல்கட்டமாக இந்தப் பொதுக்கூட்டத்தில், 18 வேட்பாளர்களை அறிவிக்கிறோம். எங்களிடம் பணம் இல்லை. மக்களை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறோம். புழுத்துப்போன அரசியலை புனிதப்படுத்த இருக் கிறோம். ‘ஊழலற்ற நிர்வாகம், மது வற்ற மாநிலம்’ என்கிற கொள் கையை முன்னெடுக்க உள்ளோம்.
தமிழகத்தில், மற்ற கட்சிகள் மீதான வெறுப்பில்தான் நாங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்குகிறோம். எங்கள் வேட்பாளர்கள், தமிழகத்தில் ஒரு முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராக உருவெடுப்பர். இனி யாருக்கும் இரவல் குரல் கொடுக்க மாட்டோம். அதேசமயம் இன்னொரு கட்சியின் தோளில் அமர்ந்து பயணிக்க மாட்டோம். எங்களுக்கு பதவி மோகம் கிடை யாது. அரசியல் ஆதாயத்துக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.
காங்கிரஸ், பாஜக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம். இவர்களிடமிருந்து, விலகி நிற்போம். இம்முறை, மாவட்டத் துக்கு ஒருவரை தேர்தலில் நிறுத்துகிறோம்” என்றார்.