

தனுஷ்கோடி கடற்பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஜெல்லி மீன்கள் அதிகளவில் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
ஜெல்லிமீன்கள் குழியுடலிகள் இனத்தைச் சார்ந்தவை. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் அதிகம் காணப்படுகின்றனர். கடல் உயிரினங்களிலேயே மிகவும் அழகானதும், ஆபத்தானவையுமான ஜெல்லி மீன்களின் நஞ்சத்தன்மையினால் மனிதர்களுக்கு வாந்தி, மயக்கம், மார்புவலி ஏற்பட்டு அதிகப்பட்சம் மரணத்தையும் ஏற்படுத்தும். இதனால் வலையில் சிக்கும் ஜெல்லி மீன்களை கையில் படாமல் மீண்டும் கடலிலேயே மீனவர்கள் விட்டுவிடுவார்கள்.
கடந்த ஒரு வார காலமாக ஜெல்லி மீன்கள் தனுஷ்கோடியில் நூற்றக்கணக்கில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இதனை தனுஸ்கோடி வந்த ஆன்மீக பக்தர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இந்த மீனைப் பற்றி மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சித்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,
கடல் வாழ் உயிரினங்களில் ஜெல்லி மீன்கள் மிகவும் மிருதுவானவை. கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்களும், மனிதர்களினால் கடலில் கலக்கக்கூடிய கழிவுகளால் ஜெல்லி மீன்கள் அதிக எண்ணிக்கை கொண்ட குழுக்களாக கரை ஒதுங்குவது உலகளவில் அதிகரித்து வருகிறது. ஆனால் மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பப்பகுதியான தனுஸ்கோடியில் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்குவது இது முதல்முறையாகும், என்றனர்.