

சுற்றுலா பயணிகளைக் கவரவும், மாணவர்களின் அடிப்படை அறிவியல் அறிவை மேம்படுத்தவும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் புதிய மாதிரி விண்வெளி கூடம் இம்மாதம் இறுதிக்குள் திறக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் ஐயம்பெருமாள் கூறியதாவது:
இந்த மையம் பொழுதுபோக்கு இடமாக மட்டுமின்றி, அறிவையும் சிந்தனையையும் தூண்டும் இடமாகவும் அமைந்துள்ளது. எனவே இங்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 24,000 பேர் வந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 25,000 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், இந்த மே மாதத்தில் இதுவரையில் 24,000 பேர் வந்து பார்த்து சென்றுள்ளனர். இது, இம்மாத இறுதிக்குள் 35,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மையத்தை மேம்படுத்த பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய மாதிரி விண்வெளி கூடம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), தமிழ்நாடு பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் இணைந்து இந்த வளாகத்தில் சுமார் 4 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்திய விண்வெளி மாதிரி கூடம் அமைத்துள்ளன.
இதில், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விளக்கும் வகையில் மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மொத்தம் ரூ.75 லட்சம் செலவாகியுள்ளது. இந்த மாதிரி கூடம் இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும்.
மாதிரி அணுசக்திக் கூடம்
மத்திய அரசின் அணுசக்தி மையத்துடன் இணைந்து இங்கு அணுசக்தி மாதிரி கூடமும் 5,000 சதுர அடிகளில் ரூ.2.3 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. அணுசக்தியை உருவாக்கும் முறைகள், அணுப்பிளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது மற்றும் அணு மின்நிலையங்கள் செயல்படும் முறை குறித்து விளக்கும் மாதிரிகள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டப் பணிகள் 9 மாதங்களில் முடிந்து, மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.