Published : 28 Jul 2015 01:03 PM
Last Updated : 28 Jul 2015 01:03 PM

இந்தியாவின் இணையற்ற மனிதர்: ஸ்டாலின் புகழஞ்சலி

நேர்மை, எளிமை, அறிவுக்கூர்மை மிகுந்த இணையற்ற மனிதராக திகழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவில், ''கலாம் ஒரு தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானி. இந்திய விண்வெளித்திட்டத்தில் அவரது பங்களிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. அவரது திறமையைப் பார்த்த உலக நாடுகள் இந்தியாவின் மீது மரியாதை செலுத்தியது. அது மட்டுமின்றி உலக நாடுகள் எல்லாம் நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர் டாக்டர் அப்துல் கலாம்.

ஏவுகணை மற்றும் பாதுகாப்பு திட்டங்களில் அவர் ஆற்றிய பங்கு அதை விட முக்கியமானது. தொழில்நுட்பத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகளால் உலகில் மிகவும் முன்னேறிவிட்ட ராணுவத்திற்கு இணையாக நம் ராணுவத்தை உயர்த்தியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கலாம் ஆற்றிய ஆர்வமூட்டும் உரைகள் சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளையும், இளைஞர்களையும் தங்களுக்காகவும், தங்கள் நாட்டிற்காகவும் கனவு காண வைத்தது. "எதையும் சாதிக்கும் திறமை இந்தியாவிற்கு இருக்கிறது" என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தி, நம் நாட்டிற்கு உலக அரங்கில் மரியாதையும், பெருமையையும் தேடித் தந்தவர்.

ராமேஸ்வரத்தில் பிறந்து, கனவுகளுடன் வளர்ந்து இந்தியாவின் குடியரசுத் தலைவரான எளிமையான சிறந்த மனிதர் டாக்டர் அப்துல் கலாமின் பெருமைகளை நம் நாடு நினைவில் வைத்திருப்பதோடு, அவருக்கு என்றும் நன்றிக் கடன்பட்டிருக்கும்.

டாக்டர் கலாம் தான் மட்டும் கனவு காணாமல் இந்த நாட்டின் இளைய தலைமுறையையும் "கனவு காணுங்கள். சாதிக்க முடியாதது எதுவும் இல்லை" என்று உணர்வுகளை தட்டி எழுப்பியிருக்கிறார். இன்றைய தினம் அவர் நம்மிடம் இல்லை. அவரது மறைவு நமக்கு எல்லாம் பேரிழப்பு.

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் இந்தியாவை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று பாடுபட்ட டாக்டர் அப்துல் கலாமின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றி, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண்போம் என்று இந்த நேரத்தில் உறுதியேற்றுக் கொள்வோம்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x