

விவசாய பயிர்க் கடன்களுக்கான வட்டி மானியத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
விவசாயத் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு தேசியமய மாக்கப்பட்ட வங்கிகள், தனியார், பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. இதன்படி, விவசாய பயிர்க் கடனுக்கு 9 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில், 2 சதவீத வட்டியை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
இதனால், விவசாயிகள் 7 சதவீத வட்டி மட்டுமே செலுத்தினால் போதுமானது. மேலும் ஒரு விவசாயிக்கு நகைக் கடன் மற்றும் இதர கடன்கள் என அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கடன் தவணைக் காலமான ஓராண்டுக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிக்கு மேலும் 3 சதவீத வட்டியை கழித்துக் கொண்டு 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக் கப்பட்டது.
இந்நிலையில், ஆண்டுதோறும் மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக் கடன்களுக்கான மானியத்தை அறிவிக்கும். வேளாண்மைக் கடன்களுக்கான மானியத்தை நடப்பு நிதியாண்டுக்கு மத்திய அரசு அறிவிக்காததால் விவசாயக் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வங்கிகள் நிறுத்தின. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விவசாய பயிர் கடன்களுக்கு 2014-15 நிதியாண்டில் வழங்கப் பட்ட வட்டி மானியத்தையே 2015-16 நிதியாண்டுக்கும் வரும் ஜூன் 30-ம் தேதி வரை வழங்க வேண்டும். அதன் பிறகு மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயல்படுமாறு ஏப்ரல் 16-ம் தேதி ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில், விவசாய பயிர்க் கடன்களுக்கு வட்டி மானி யத்தை ரிசர்வ் வங்கி மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘விவசாய பயிர்க் கடனுக்கான வட்டி மானியத்தை ஜூன் 30-ம் தேதி ரத்துசெய்ய ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, இந்தக் காலக்கெடுவை மேலும் நீட்டிக் குமாறு மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று இம்மாதம் (ஜூலை) 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’’ என் றார்.
விவசாயிகளுக்கு பயனில்லை
இதுகுறித்து, அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘விவசாய பயிர்க் கடன்களுக்கான வட்டி மானி யத்தை மேலும் நீட்டித்து அளிக் கப்பட்டுள்ள கால அவகாசத்தால் விவசாயிகளுக்கு எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.
விவசாயக் கடன்களுக்கு 4 சத வீதம் வட்டி மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந் துரையை ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவோம் என பாஜக அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான்’’ என்றார்.