

அரசு சட்டக் கல்லூரிகளில் முதுகலை சட்டப் படிப்பில் (எல்எல்.எம்) சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் நாளை (புதன்கிழமை) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் முதுகலை சட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. 2015-16-ம் கல்வி ஆண்டில் இப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஜூலை 15-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும். மேற்கண்ட அரசு சட்டக் கல்லூரிகளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
வேலூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் முதுகலை சட்டப் படிப்பு வழங்கப்படவில்லை என்ற போதிலும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அந்த கல்லூரிகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்குநர் பேராசிரியர் சந்தோஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.