

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துரை(50). இவரது மனைவி இறந்துவிட்டார். மகன் பிரகாஷ்(24), கட்டிடத் தொழிலாளி. தந்தையும், மகனும் பள்ளி செல்லும் சிறுமிகள் 3 பேருக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தினர் துரை மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல, 12-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அறந்தாங்கி அருகேயுள்ள அம்மாபட்டினத்தைச் சேர்ந்த பட்டதாரி ஜே.ராஜ்கிரணை அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விளையாடிக்கொண்டிருந்த 11-வயது சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்த கீரனூர் அருகேயுள்ள நீர்பழனி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி மகன் வெள்ளிச்சாமிக்கு (32) கடந்த வாரம் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்துவரும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் சம்பவங்களுக்கு, அதுதொடர்பாக விழிப்புணர்வு இல்லாததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆலங்குடி கே.செந்தில்ராஜா கூறியபோது, “பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளே இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்குகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். அதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மற்ற சம்பவங்கள் உள்ளூர் செல்வாக்கின் மூலம் மூடிமறைக்கப்பட்டுவிடுகின்றன.
இதுபோன்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். ஸ்மார்ட் போன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தி போதியளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது போலீஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லூர்துமேரி கூறியபோது, “மற்றவர்கள் எதார்த்தமாக பேசுவதற்கும், பாலியல் நோக்கில் பேசுவதற்குமான வேறுபாடுகளை அறிவது குறித்து பள்ளிகளில் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
1098-க்கு புகார் தெரிவித்தால் அவர்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் தீர்வு காணப்படும். பாதிக்கப்பட்டோர் பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்று படிக்க விரும்பினால் மையங்களில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும், பாதிப்பட்டோருக்கு அரசிடம் இருந்து உதவித்தொகை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. பாதிப்பை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டரீதியான ஆலோசனையும் வழங்கப்படுகிறது” என்றார்.