கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர்கள் தினமாக அறிவிக்க பிரதமரிடம் விஜய்காந்த் கோரிக்கை

கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர்கள் தினமாக அறிவிக்க பிரதமரிடம் விஜய்காந்த் கோரிக்கை
Updated on
1 min read

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முன்னாள் குடியரசுத் தலைவரும் மக்கள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல் கலாமின் திடீர் மறைவு இந்த உலகை, நம் நாட்டு மக்களை, குறிப்பாக தமிழக மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கலாம், தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் அக்டோபர் 15, 1931 அன்று பிறந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பல்வேறு மதநம்பிக்கைகள் நிலவிய சகிப்புத் தன்மை சமூகச்சூழலில் அவர் வளர்க்கப்பட்டார். அவர் முற்போக்கு எண்ணம் கொண்டவர்.

வாழ்க்கையில் பல இடர்பாடுகளைக் கடந்து அணுவிஞ்ஞானியானார், நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா அவருக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியர்களுகு உலகில் ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்தது.

உலகில் உள்ள மாணவர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக அவர் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். இளம் இந்தியர்கள் அவரது பிறந்தநாளை தேசிய மாணவர்கள் தினமாக கொண்டாட விழைகின்றனர்.

எனவே, தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக, நான் உங்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம் கலாம் பிறந்த தினத்தை தேசிய மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்பதையே.

உங்கள் தலைமையின் கீழுள்ள மத்திய அரசு நிச்சயம் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in