Published : 19 Jul 2015 02:22 PM
Last Updated : 19 Jul 2015 02:22 PM

தமிழகத்தில் சூதாட்டமாகும் கேரள லாட்டரிச் சீட்டுப் பரிசு!

கேரள அரசின் லாட்டரிச் சீட்டுக் குலுக்கல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் சூதாட்டம் நடப்பதாக தமிழக- கேரள எல்லையான வேலந்தாவளம் லாட்டரி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக- கேரள எல்லையான வேலந்தாவளம் பகுதியில் சாலையின் இருபுறமும் கேரள லாட்டரி கடைகள் ஏராளமாக உள்ளன. லாட்டரி வியாபாரம் மற்றும் பரிசு குறித்து கடைக்காரர்கள் கூறியதாவது:

கேரளத்தில் தனியார் லாட்டரிச் சீட்டு விற்றபோது கமிஷனும், பரிசும் அதிகம் கிடைத்தது. விற்பனையாளர் பரிசு, டீலர் பரிசு என கொடுத்தார்கள். கோவையிலிருந்து தினமும் வரும் வியாபாரிகள், சீட்டுகள் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு டிசி (பில்லில் வரிசை எண்கள் மட்டும்) மட்டும் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அந்த தனியார் லாட்டரிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசு தடைவிதித்தது.

தற்போது, கேரள மாநில அரசே, தினசரி மற்றும் பம்பர் லாட்டரிச் சீட்டுகளை வெளியிடுகிறது. தினமும் 56 லட்சம் லாட்டரிச் சீட்டு சுமார் ரூ. 5 கோடிக்கு கேரளத்தில் விற்பனையாகிறது. அதில் நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் மட்டுமே விற்பனை யாளர்களுக்கு கிடைக்கிறது. பரிசு விழுந்தால் அதைப் பெற ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் போன்ற பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை உள்ளது. இதனால், தமிழ்நாட்டி லிருந்து லாட்டரிச் சீட்டுகள் வாங்க, முன்புபோல கேரளத்துக்கு யாரும் வருவதில்லை.

அதற்குப் பதிலாக, லாட்டரி மோகம் கொண்டவர்களை லாட்டரிச்சீட்டு சில்லரை வியாபாரிகள் அணுகுகிறார்கள். அவர்களுக்கு லாட்டரிச் சீட்டு விற்பதற்குப் பதில் எண்களை மட்டும் விற்கிறார்கள். கடைசி மூன்று எண் அல்லது நான்கு எண் வேண்டும் என்றால் அந்த எண்ணை ஒரு தாளில் எழுதி அந்த வாடிக்கையாளரிடம் கொடுத்துவிடுவார். குலுக்கல் தேதி மற்றும் அந்த லாட்டரிச் சீட்டின் வகையும் அதில் இடம்பெற்றிருக்கும்.

லாட்டரி குலுக்கலில் அதே எண்ணுக்கு பரிசு விழுந்தால், எண்ணை எழுதி வாங்கிக் கொண்டவர் பரிசை கொடுத்து விடுவார். இப்படி ஒரு ஒரு சூதாட்டமாகவே நடக்கிறது லாட்டரி பரிசுத் தொகை. இதில், பணம் போட்டு பணம் எடுக்கும் முக்கியப் புள்ளிகளும் உள்ளனர். இந்த சூதாட்டத்தில் பணப் பரிவர்த்தனையில் பிரச்சினை எழுந்து, காவல் நிலையம் வரை செல்பவர்களும் உண்டு. ஆனால், பிரச்சினைக்கு உள்ளானவர்களிடம் ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், போலீஸாரால் வழக்கு போட முடிவதில்லை. எனவே, தமிழக போலீஸார் வேலந்தாவளம் வந்து லாட்டரிச் சீட்டுகளை வாங்கிச் சென்று வழக்கு பதிவு செய்கிறார்கள்.

லாட்டரிச் சீட்டுக் குலுக்கல் கேரளத்தில் நடந்ததும், அதன் முடிவுகளை அங்குள்ள ஏஜென்டுகள், எஸ்எம்எஸ் மூலம் சூதாட்டக்காரர்களுக்கு தகவல் தெரிவித்துவிடுகிறார்கள். அந்த எண்களை வைத்து தமிழ்நாட்டில் பரிசு பரிவர்த்தனை சூதாட்டத்தை நடத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கேரளத்துக்கு எரிசாராயம் கடத்தல்?

வேலந்தாவளம் கேரள எல்லையின் நுழைவிலேயே கேரள வணிகவரித் துறையின் சோதனைச் சாவடி உள்ளது. இந்த வழியே செல்லும் லாரிகளில் எரிசாராயம் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை கண்டுபிடிக்க கூர்மையான நீள கம்பியால் லாரியில் அடுக்கப்பட்ட சரக்குப் பொருட்களில் குத்தி அலுவலர்கள் சோதனையிடுகிறார்கள். இப்படி சோதனையிடும்போது எரிசாராயம் இருந்தால் குத்துபட்டு கசியும், அதன் மூலம் வாசம் வரும் என்பதாலேயே இந்த முறை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்த வழியே மட்டும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு 500 முதல் 600 லாரிகளில் எரிசாராயம் செல்வதாக சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

அவர்கள் கூறும்போது, 'மூன்று மாதத்துக்கு ஒரு முறை இந்த சோதனைச் சாவடியில் ஆட்களை மாற்றுகிறார்கள். மொத்தம் 10 பேர் ஷிப்ட் வாரியாக பணிபுரிகிறார்கள். அவர்கள் புதிதாக இங்கே வந்து பொறுப்பேற்கும் ஒரு சில நாட்கள் மட்டும்தான் இப்படி லாரியில் சரக்கை குத்தி சோதனையிடுவது நடக்கும். பின்னர், பணம் பெற்றுக்கொண்டு 'ஓ போய்க்கோ!' என்று சொல்லி சரக்கு லாரிகளை அனுப்பிவிடுகிறார்கள்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x