வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது: குடிநீர் வாரியம் விளக்கம்

வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது: குடிநீர் வாரியம் விளக்கம்
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழை தொடங் கும் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு நீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு முக்கிய நீர்த் தேக்கங்கள் வேகமாக வறண்டு வருகின்றன. 11.05 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த் தேக்கங்களில் 0.859 டி.எம்.சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருந்து பெறப்பட்டு வந்த கிருஷ்ணா நீர் தற்போது நின்று போயுள்ளது. நிரந்தரமான இயற்கை நீராதாரம் என்று எதுவும் இல்லாத சென்னை நகரம் தற்போது கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் மற்றும் வீராணம் திட்டங்களையே நம்பி உள்ளது. நகரை எதிர்நோக்கி இருக்கும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஈரோட்டிலிருந்து ரயிலில் தண்ணீர் கொண்டு வருவதற்கான வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை தொடங்கும் வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:

சென்னை நகருக்கு சராசரியாக நாளொன்றுக்கு 580 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் தலா 200 மில்லியன் லிட்டரும், வீராணம் திட்டத்தின் மூலம் 180 மில்லியன் லிட்டரும் பெறப்படுகிறது. மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படவுள்ளதால் வீராணம் திட்டத்தின் தண்ணீர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட விவசாய கிணறுகளிலிருந்து தற்போது 100 மில்லியன் லிட்டர் நீர் கிடைக்கிறது. இதைத் தவிர குடிநீர் வாரிய கிணறுகளிலிருந்து 25 மில்லியன் லிட்டர் நீர் கிடைக்கிறது.

ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு பிறகு சென்னையில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போதுள்ள நீரைக் கொண்டு மழை பெய்யும் வரை குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சமாளிக்க முடியும். மேட்டூரிலிருந்து நீர் கொண்டு வரும் திட்டமும், ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதும் இப்போது தேவைப்படாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in