

மகாபாரத கதைகளை பின்னணியாகக் கொண்டு வேலூரில் தயாராகும் களிமண் பொம்மைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வேலூர் கொசப்பேட்டையில் களி மண்ணால் ஆன பொம்மைகள் தயாரிக்கும் பணியில் 3 குடும்பங்கள் பல தலைமுறைகளாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தயாரிக்கும் பொம்மைகள் பூம்புகார் கைவினைப் பொருட்கள் மற்றும் காதி பவன்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி விழாக்கள் இவர்களுக்கான முக்கிய சந்தை வாய்ப்புக் காலம். இவர்களது கைவண்ணத்தில் தயாராகும் பொம்மைகளுக்கு அழகிய வண்ணங்கள் தீட்டும்போது அதன் அழகு மேலும் மெருகூட்டப்படுகிறது.
4-வது தலைமுறையாக பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள செந்தில்குமார் கூறும்போது, ‘‘எல்லாரும் வணங்கும் கடவுள்களை தயாரிப்பதை பெருமையாக நினைக்கிறோம். பண்டிகைக் கால பொம்மைகள் தயாரிப்பதுடன், கடவுளின் பல்வேறு அவதாரங்கள், கடவுளின் குடும்பங்கள், சீனிவாச கல்யாணம், கிருஷ்ண லீலை, அஷ்டலட்சுமி, கடோத்கஜன் சிலைகள் 3 அங்குலம் உயரம் முதல் 2 அடி உயரம் வரை தயாரிக்கிறோம். சிலைகளை ரூ.35-ல் இருந்து ரூ.1,000 வரை விற்பனை செய்கிறோம்’’ என்றார்.
இவர்கள் தயாரிக்கும் சிலைகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் என்பதால் 6 மாதங்களுக்கு முன்பே பொம்மை தயாரிப்பை தொடங்கிவிடுகின்றனர். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் பொம்மைகள் மொத்தமும் தயாராகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக மகாபாரதத்தில் வரும் குருசேஷத்ர போரில் கண்ணன் அர்ஜூனனுக்கு செய்யும் கீதா உபதேசம், திருமாலின் விஸ்வரூப தரிசன சிலைகள் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக அனுப்பியுள்ளனர்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘சென்னையைச் சேர்ந்த சில வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில் உள்ள உறவினர்களுக்காக கீதா உபதேசம், விஸ்வரூப தரிசன சிலைகளை ஆர்டர் கொடுத்து வாங்கிச் சென்றனர். கொலு பொம்மைகள் வியாபாரிகளின் ஆர்டரின் பேரில் அதிக அளவில் செய்துகொடுக்கிறோம்’’ என்றார்.
காஞ்சிபுரம், கடலூர் என பல்வேறு இடங்களில் பொம்மைகள் தயாரித்தாலும் வேலூர் பொம்மைகளுக்கு தனி சிறப்பு ஒன்று இருக்கிறது என்ற செந்தில்குமார், ‘‘அர்த்தநாரீஸ்வரர், ராமர் ஆஞ்சநேயரின் ஆலிங்கனம் செய்யும் சிலைகளை நாங்கள் மட்டுமே செய்கிறோம் என்பதில் பெருமையாக இருக்கிறது. பரம்பரை தொழிலை அடுத்தகட்டத்துக்கு என் மகன் எடுத்துச் செல்லட்டும். இதற்காகவே அவனை நன்றாக படிக்க வைக்கிறேன். ஐந்தாவது தலைமுறையாக பொம்மைகள் தயாரிப்பதில் என் மகனுக்கு ஆர்வம்’’ என பெருமையாக கூறினார்.