Published : 25 Jul 2015 08:20 AM
Last Updated : 25 Jul 2015 08:20 AM

சென்னையின் குடிநீர் தேவைக்காக தனியார் விவசாய கிணறுகளில் எடுக்கப்படும் நீர் அளவு அதிகரிப்பு

சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய கிணறுகளில் கூடுதலாக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய நீர் ஆதாரங்களை கண்டறியும் பணியும் தீவிரமாக நடக்கிறது.

சென்னை மாநகரின் மக்கள்தொகை 70 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குடிநீர் தேவை தினமும் 1,000 மில்லியன் லிட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் 600 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பாலும், போதிய மழை பெய்யாததாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. கிருஷ்ணா நதிநீர் திட்டத்தில் ஆந்திராவில் இருந்து கிடைக்கும் நீரும் கிடைக்காத நிலையில், குடிநீர் தேவையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை குடிநீர் வாரியம் செய்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையின் குடிநீர் ஆதாரங்களை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, குடிநீர் ஆதாரங்களைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக விவசாய கிணறுகளில் இருந்து எடுக்கும் நீரின் அளவை அதிகரித்துள்ளனர்.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னை மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யும் முயற்சியாக, கூடுதல் நீர் ஆதாரங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் பகுதியில் 250 விவசாயக் கிணறுகளில் இருந்து 70 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டுவரப் பட்டது. தொடர்ந்து நிலைமை மோசமாவதால் 30 மில்லியன் லிட்டர் அதிகரிக்கப்பட்டு, தற்போது 100 மில்லியன் லிட்டர் எடுக்கப் படுகிறது. இதன்மூலம் தேவையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். புதிய நீர் ஆதாரங்களை கண்டறியும் பணியும் தொடர்ந்து நடக்கிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x