

தமிழகம் முழுவதும் ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், கடந்த 2 வாரமாக ஹெல்மெட் விற்பனை அதிகரித்து வந்தது. இதனிடையே போலி ஹெல்மெட்களும் அதற்கான தள்ளுபடி அறிவிப்புகளும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வந்தன.
குறிப்பாக கடைசி 2 நாட்களில், ஹெல்மெட் வாங்குவதற்காக கடைகளில் கூட்டம் அலைமோதியது. வாகனம் ஓட்டுபவர் மட்டுமில்லாமல், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் அணிய வேண்டும் என்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் இன்னமும் குறையவில்லை.
இந்நிலையில், இந்த சீசனைப் பயன்படுத்தி, பல இடங்களில் இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை வைத்து ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுவதக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.
இருமடங்கு விலையில் ஹெல்மெட் விற்பனை: கோவை மக்கள் கடும் அதிருப்தி
ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இருமடங்கு விலை வைத்து அவை விற்பனை செய்யப்படுகின்றன. இதைத் தடுக்க நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள தனியார் விற்பனை நிலையங்களில் நேற்று மதியம் ஏராளமானோர் ஹெல்மெட்களை வாங்கியுள்ளனர். அப்போது இருமடங்கு விலை நிர்ணயிக்கப்படுவதாகவும், சரியான ரசீது கொடுக்க மறுக்கிறார்கள் எனவும் கூறி, வாடிக்கையாளர்கள் சிலர் மறியலில் ஈடுபட முயன்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.
கோபி என்ற இளைஞர் கூறும்போது, ‘தரமான ஹெல்மெட் வேண்டுமென்பதற்காகவே இங்கு வந்து வாங்கினேன். ஆனால் ரூ.1000 மதிப்புள்ள சாதாரண ஹெல்மெட் ரூ.2200க்கு விற்கின்றனர். வேறுவழியின்றி வாங்க வேண்டியதாயிற்று’ என்றார்.
ஷாஜகான் என்பவர் கூறும்போது, ஹெல்மெட் அவசியம் என்பதை தெரிந்து கொண்டு, நாளுக்கு நாள் அதன் விலையை அதிகப்படுத்திக் கொண்டே செல்கின்றனர். மக்கள் பின்பற்ற வேண்டுமென ஒரு சட்டம் கொண்டு வந்தால், அதை இப்படி சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். சனிக்கிழமை ரூ.1400-க்கு விற்பனையான ஹெல்மெட், செவ்வாய்க்கிழமை இரவு ரூ.2000-க்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. இதற்கு சரியான பில் கொடுப்பதில்லை. எனவே அங்கு ஹெல்மெட் வாங்கிய 25 பேர் இணைந்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்’ என்றார்.
ஹெல்மெட் அணிவதை போலீஸார் கண்காணிப்பதைப் போல, அவை சரியான விலைக்கு விற்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
அதிகவிலைக்கு ஹெல்மெட் விற்கப்படுவதாகக் கூறி வாடிக்கையாளர்கள் நேற்று கிராஸ்கட் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
திண்டுக்கல்லில் ஹெல்மெட் விலை 3 மடங்கு உயர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் தட்டுப்பாட்டால் ஹெல்மெட் விலை மூன்று மடங்கு உயர்ந்தது. இதனால் நேற்று 60 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை.
கடந்த ஒருவாரமாக, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் வாங்க ஆர்வம் காட்டினர். கடைகளில் போதுமான ஹெல்மெட் விற்பனைக்கு வராததால் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தட்டுப்பாட்டால் ரூ.500, ரூ.600 விற்ற ஹெல்மெட்டுகள், கடந்த இரு நாளாக ரூ. 1200 முதல் ரூ. 1800 வரை மூன்று மடங்கு உயர்ந்தது.
இந்த விலையில் சாதாரண மக்களால் ஹெல்மெட் வாங்க முடியவில்லை. போலீஸார் கெடுபிடியால் வசதி படைத்தவர்கள் ஹெல்மெட் வாங்க தயாராக இருந்தும் தட்டுப்பாட்டால் கிடைக்கவில்லை.
குறிப்பாக, பெண்களுக்கான ஹெல்மெட் மாவட்டத்தில் எந்த கடைகளிலும் விற்பனைக்கு வரவில்லை. அதனால், நேற்று மாவட்டத்தில் 60 சதவீதம் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவில்லை. பரவலாக ஹெல்மெட் தட்டுப்பாடு ஏற்பட்டதால் போலீஸாரும், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நேற்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எச்சரித்து அனுப்பினர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு வாகன ஓட்டிகளிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஹெல்மெட்டுகள் விற்பனைக்கு வரவில்லை. கிராமங்களில் ஹெல்மெட் விற்பனைக்கே வரவில்லை. அதனால், வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஹெல்மெட் முழுமையாக விற்பனைக்கு வரும்வரை அணிவது கட்டாயமில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்காமல் இருக்க வாய்ப்புள்ளது என்றார்.
பெங்களூரிலும் ஹெல்மெட் தட்டுப்பாடு
தமிழகத்தில் ஹெல்மெட் தட்டுப்பாடு காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வாகன ஓட்டிகள் படையெடுத்தனர். ஆனால், பெங்களூர் நகரில் ஜேசி நகர், ஊர்வசி தியேட்டர், டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் ஹெல்மெட் மொத்த விற்பனை செய்யும் பெரும்பாலான கடைகளில் ''நோ ஸ்டாக் '' அறிவிப்பு பலகை வைத்துள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர்.
பெங்களூரில் வசிக்கும் நபர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஹெல்மெட் வாங்கி பேருந்து அல்லது கொரியர் மூலம் அனுப்புவது, சில வியாபாரிகள் மொத்தமாக ஹெல்மெட் வாங்குவது போன்ற காரணங்களால் பெங்களூரில் ஹெல்மெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நெருக்கடி
பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் சம்பளம் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை வழங்கப்படும். ஆனால், 1-ம் தேதியே ஹெல்மெட் கட்டாயம் என்பதால் பலரால் வாங்க முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இதனால், இல்லாத ஹெல்மெட்டை எங்கு வாங்குவது என வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 80 ஆயிரம் பேரிடம் நேற்று ஆவணங்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.