

தமிழகத்தில் அடுத்த இரு நாட் களில் வெயில் 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்கள் முடிந்து தென்மேற்கு பருவ மழை தொடங்கி ஒரு மாதமான பிறகும் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை, கடலூர், மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மற்ற பகுதிகளைவிட அதிகமான வெயில் பதிவாகி வருகிறது. இதில் சென்னை, கடலூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் கடந்த 5 நாட்களில் வெயில் 40 டிகிரிக்கு மேல் எட்டியுள்ளது.
நேற்று அதிகபட்சமாக சென்னையில் 40.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. தஞ்சை, நாகப்பட்டினத்தில் 39 டிகிரி, திருச்சியில் 38.7 டிகிரி, பாளையங்கோட்டையில் 38.5 டிகிரி, மதுரையில் 38.4 டிகிரி, தூத்துக்குடியில் 38 டிகிரி வெயில் பதிவானது.
இந்நிலையில் தமிழகத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வெயில் மேலும் 2 அல்லது 3 டிகிரி அதிகரிக்கும். சென்னையில் பகலில் வெயில் கடுமையாக இருக்கும். அதிகபட்ச வெயில் 40 டிகிரி அளவில் இருக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.