நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 4 மாவட்ட ஆட்சியர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் - ஆக்கிரமிப்பை அகற்றாத விவகாரம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 4 மாவட்ட ஆட்சியர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் - ஆக்கிரமிப்பை அகற்றாத விவகாரம்
Updated on
1 min read

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப் புரம் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மதுராந்தகம் தாலுகா ஜமீன் எண்டத்தூர் கிராமப் பகுதியில் உள்ள ஏரி புறம் போக்கில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருப்பதாகவும் அதை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆர்.விஜயகுமார் என்பவர் புகார் கொடுத்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல தடவை மனு கொடுத்தும் பலனில்லை.

இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏரி புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றும்படி உத்தரவிட்டது. அதன்பிறகும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் விஜயகுமார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கே.சண்முகம், கோட்டாட்சியர் பர்கீத் பேகம், வட்டாட்சியர் ஜெயதீபன் ஆகியோர் ஆஜராகி, ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளித்ததுடன், நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினர். இதையடுத்து வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் விசாரணைக்காக உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.

ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளித்ததுடன், நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரினர். இதையடுத்து வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in