

கல்விக் கட்டணம் செலுத்த உதவிய 'தி இந்து' வாசகர்களின் உறுதுணையுடன், மருத்துவக் கல்லூரிக்கு நுழைவதாக, புதுச்சேரி அரசு பள்ளியில் படித்து எம்பிபிஎஸ் சீட் கிடைக்கப்பெற்ற மாணவர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
'தி இந்து' நாளிதழ் - ஆன்லைன் வாசகர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரின் உதவியால் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஏழை மாணவர் கார்த்தி சேர்ந்துள்ளார். தற்போது வரை இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணம் கிடைத்துள்ளது. அந்தத் தொகையை தான் படித்த பள்ளியிலேயே அவர் இன்று பெற்றுக்கொண்டார்.
புதுச்சேரி எல்லப்பிளைச்சாவடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது தந்தை பாலசுப்ரமணியன் டெய்லரிங் வேலை செய்கிறார். தாய் சரளா வீட்டு பணிகளை பார்க்கிறார். ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து 1141 மதிப்பெண் எடுத்தார். அவருக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது.
முதலாண்டுக்கு ரூ.96 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. முதலாண்டு கட்டணத்தை செலுத்துவதே கஷ்டம், மருத்துவப் படிப்பு முழுவதும் எப்படி கட்டணம் செலுத்த முடியும் என தெரியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பான செய்திக் கட்டுரை 'தி இந்து'வில் வெளியாகியிருந்தது. | இணைப்பு: >அரசு பள்ளியில் படித்து எம்பிபிஎஸ் 'சீட்' கிடைத்தும் மருத்துவக் கல்லூரி கட்டணம் செலுத்த வழியின்றி தவிக்கும் மாணவர் | இதையடுத்து பலரும் உதவிக்கரம் நீட்டினர். இதையடுத்து, மருத்துவக் கல்லூரியில் அவர் கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
மேலும் இரண்டாம் ஆண்டுக்கான மருத்துவக் கல்வி கட்டணமும் தற்போது அவருக்கு பலரின் உதவியால் கிடைத்துள்ளது. அந்தத் தொகையை பள்ளி வளாகத்தில் இன்று காலை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியை புதுச்சேரி பெற்றோர் ஆசிரியர் மாணவர் நலச்சங்கம், ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மாணவர் கார்த்தி நெகிழ்ச்சி
பள்ளி முதல்வர் மொகிந்தர்பால், துணை முதல்வர் செல்வசுந்தரி, பெற்றோர், ஆசிரியர் மாணவர் நலச்சங்கத் தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர் கார்த்தி கூறும்போது, " 'தி இந்து'வில் செய்தி வெளியான பிறகு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் உதவி கிடைத்தது. செய்தியைப் பார்த்து ரூ.500 தொடங்கி ரூ.35 ஆயிரம் வரை உதவி செய்தனர். 'தி இந்து' செய்தியை ஆன்லைனில் பார்த்துவிட்டு சிங்கப்பூரில் இருந்து அதிபட்சமாக ரூ.35 ஆயிரம் உதவி செய்தார்கள். இந்த உறுதுணையுடன் முதலாண்டு கட்டணத்தை கட்டியுள்ளேன். அதேபோல், ஆசிரியர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து என் படிப்புக்கு உதவியதை மறக்க முடியாது" என்றார்.
பெற்றோர் ஆசிரியர் மாணவர் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி கூறும்போது, "இதுவரை மொத்தமாக ரூ.1.6 லட்சம் கிடைத்தது. அதில் முதலாண்டு கட்டணத்தை செலுத்தியுள்ளார். மீதியுள்ள தொகையை அவரது பெயரில் வங்கி கணக்கில் வரவு வைக்க உள்ளோம். இதர ஆண்டு கட்டணத்தை திரட்ட முயற்சித்து வருகிறோம். 'தி இந்து'வால்தான் இரு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் கிடைத்தது" என்றார்.
பள்ளி ஆசிரியர் பாரி கூறும்போது, "எங்கள் பள்ளி மாணவர் மருத்துவக் கல்லூரியில் சேர நல்ல மதிப்பெண் எடுத்து சேர இயலாமல் இருப்பதை அறிந்தோம். அதையடுத்து அனைத்து ஆசிரியர்களும் தங்கள் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை முழு விருப்பத்துடன் அளித்தோம்" என்றார்.
மாணவர்கள் முன்னிலையில் மருத்துவம் படிக்க கிடைத்த தொகையை பெற்றுக் கொண்டவுடன், அனைத்து ஆசிரியர்களும் கார்த்திக்குக்கு கைகுலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.