

ஆர்.கே.நகரில் பல இடங்களில் அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக தேர்தல் அலுவலரிடம் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர் சவுரிராஜனை மகேந்திரன் நேற்று பிற்பகல் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:
பிற்பகல் 3.45 மணி அளவில் ராயபுரம் ஆதிதிராவிடர் நல விடுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியை பார்வையிட்டேன். இந்த மையத்தில் அதுவரை 500 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் அங்கு சுமார் 1,000 பேர் குவிந்திருந்தனர். அதில் பெரும்பாலானோர் ஆண்கள். கள்ள ஓட்டுபோடும் நோக்கத்துடன் குவிந்திருக்கும் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சி.மகேந்திரன் கூறியதாவது:
வேட்பாளர் என்ற முறையில் காலை முதல் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் வாக்குப் பதிவை பார்வையிட்டு வருகிறேன். மதியம் வரை வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றது. பல இடங்களில் வாக்குச் சாவடியில் தேவையான வசதிகள் செய்யப்படவில்லை. ஆனாலும், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். ஆனால், மதியத்துக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பல இடங்களில் அதிமுகவினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.
ராயபுரம் ஆதிதிராவிடர் நல விடுதி வாக்குச்சாவடிக்கு சென்றபோது சுமார் 1,000 ஆண்கள் குவிந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். கள்ள ஓட்டு போடும் நோக்கத்துடனேயே அவர்கள் குவிந்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே, அவர்களை வெளியேற்ற வேண்டும் என தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளேன்.
அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. காவல் துறையினரை மீறி அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.