Published : 24 Jun 2015 07:33 AM
Last Updated : 24 Jun 2015 07:33 AM

குப்பை மேலாண்மைக்கான மத்திய அரசின் புதிய விதிகள்: தீவிரமாக அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

குப்பை மேலாண்மைக்கான புதிய விதிகளை மத்திய அரசு வகுத்து வருகிறது. அதன் முக்கிய அம்சம் குப்பைகளை தரம் பிரிப்பதாகும். இதனை சென்னையில் தீவிரமாக அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

2000-ம் ஆண்டு வகுக்கப்பட்ட முனிசிபல் திடக்கழிவு குப்பை மேலாண்மை விதிகளை புதுப்பிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2015-ன் வரைவு ஆவணம் மத்திய அரசால் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஜூலை 21-ம் தேதி வரை கருத்துகள் தெரிவிக்கலாம். மேலும் மாநில நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இது குறித்து கலந்துரையாடல் நடந்து வருகிறது. தமிழகத்தின் கருத்துகளை கேட்டறிய கடந்த வாரம் கோவையில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளில் அதிகமாக குப்பை சேகரமாவது சென்னை மாநகராட்சியில்தான். சென்னையில் தினமும் சுமார் 5000 டன் குப்பை சேகரமாகிறது. ஆனால், சென்னை தவிர மற்ற அனைத்து மாநகராட்சிகளிலும் சேர்த்து சுமார் 3500 டன் குப்பை சேகரமாகிறது.

இந்நிலையில், புதிய விதிகள் கூறும் முக்கிய அம்சமான குப்பையை திடக்கழிவு, திரவக்கழிவு என்று தரம் பிரிப்பது சென்னையில் தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்று மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அடையார் மண்டலத்தில் சோதனை முறையில் குப்பையை தரம் பிரிக்கும் திட்டம் அமலாக்கப்பட்டது. ஆனால் அது வெற்றியடையாத காரணத்தால் சென்னை மாநகராட்சி அதை அமல்படுத்த முடியவில்லை.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ள புதிய விதிகள் சென்னையில் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். திடக்கழிவு, திரவக் கழிவு என்று குப்பையை தரம் பிரிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருக்கலாம். இதற்கு தேவையான ஆட்களையும், நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்த வேண்டும். மறு சுழற்சி செய்ய முடியாத குப்பைகள் மட்டுமே குப்பை கிடங்குக்கு எடுத்து செல்லப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x