Published : 28 Mar 2014 10:21 AM
Last Updated : 28 Mar 2014 10:21 AM

தேர்தல் வந்தால் மட்டுமே ஜெ. வருவார்: மு.க.ஸ்டாலின்

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஜெயலலிதாவை தோற்கடித்து, திமுகவை வெற்றிபெறச் செய்யுமாறு வாக்காளர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கி.கணேஷ் குமாரை ஆதரித்து பல்லடம் மற்றும் மங்கலம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் பேசியது: மக்களை சந்திக்க சீசனுக்கு சீசன் வரக்கூடியவர் ஜெயலலிதா. தேர்தல் வந்தால் மக்களை சந்திக்க இரண்டு ஹெலிகாப்டர்களில் வருவார். அவர் மக்களை பார்க்கமாட்டார், யானைகளைத்தான் அதிகம் பார்க்க ஆசைப்படுவார். 5 அறிவு படைத்த யானை முட்டித்தள்ளியது. 6 அறிவு படைத்த நாம் ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

விசைத்தறி தொழிலுக்கு 500 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கியது திமுக. ஆனால், இன்று கூலி உயர்வு பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. இந்த தேர்தலில், திமுக வேட்பாளர்களில் 4 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒரேயொரு இஸ்லாமியருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய பெருமக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் என்றும் துணையாக இருப்பது திமுக.

மேலும், பதவியேற்றதும் 3 மாதத்தில் மின்வெட்டே இருக்காது என்றார். இப்போது மின்சாரமே இல்லை. மாற்றம் நினைத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மாநகராட்சி கழிவு மற்றும் நகராட்சிக் கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்வதாக சொன்னார். ஆனால், இதுவரை ஒரு யூனிட் கூட இதுவரை உற்பத்தி செய்யவில்லை.

அதிமுக தேர்தல் அறிக்கையில் விலைவாசியை குறைப்பதாகவும், மின்வெட்டை தீர்ப்பதாகவும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவதாகவும், 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, ஏழைகளுக்கு 3 சென்ட் நிலம் அளிப்பதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதாகவும், கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனையை அமைத்துத் தருவதாகவும் சொன்னார். இதெல்லாம் நடந்ததா? தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஜெயலலிதாவை தோற்கடித்து, திமுகவை வெற்றிபெற வையுங்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x