

ஆர்கே நகர் தொகுதியில் 2,698 வாக்காளர்கள் அதிகரித்து 2,43,241 வாக்காளர்கள் உள்ளனர்.
சென்னை ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் முடிந்தது. முன்னதாக இந்தாண்டு ஜனவரி 5-ம் தேதி இந்த தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி, இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 543 பேர். ஆண்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 960; பெண்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 508 பேர்; மற்றவர்கள் 75 பேர்.
இடைத்தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு முன் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி நடந்து வந்தது. அதனுடன் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் போன்ற பணிகளும் நடந்தன. 4 சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நேற்று வரை நடந்தது. பணிகள் முடிந்த நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் ஆர்கே நகர் தொகுதிக்கான துணை திருத்தப்பட்டியலை நேற்று சென்னை மாநகராட்சி தேர்தல் பிரிவு வெளியிட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலை சம்பந்தப் பட்ட வாக்கு பதிவு அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம்.
இந்த ஆண்டில் ஆர்கே நகர் தொகுதியில் தொடர் திருத்தம் தொடர்பாக 2,135 ஆண்கள், 2497 பெண்கள், மற்றவர்கள் 2 பேர் என 4634 பேர் பெயர் சேர்த்தல் மனு அளித்திருந்தனர். இந்த மனுக்கள் மீது கள ஆய்வு மற்றும் விசாரணைக்குப் பின், 2118 ஆண்கள், 2470 பெண்கள், மற்றவர்கள் 2 பேர் என 4,590 வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் இருந்து ஆண்கள் 906 பேர், பெண்கள் 986 பேர் என 1892 பேர் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதையடுத்து, மாநகராட் சியால் வெளியிடப்பட்ட இறுதி திருத்தப் பட்டியலுக்குப் பின், ஆர்கே நகர் தொகுதியில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 172 ஆண்கள்; ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 992 பெண்கள், மற்றவர்கள் 77 பேர் என 2 லட்சத்து 43 ஆயிரத்து 241 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தகவல்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையருமான விக்ரம்கபூர் தெரிவித்துள்ளார்.