

திருச்சி மலைக்கோட்டை குன்றின் வடபுறத்தில் பாறைகள் சூழ்ந்த இடைப்பகுதியில் பெரிய பாறை ஒன்றில் சிற்பத் தொகுதி காணப்படுவதாக மலைக்கோட்டை நலச் சங்கச் செயலாளர் சுந்தரராஜன் அளித்த தகவலின்பேரில் டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா.கலைக்கோவன் தலைமையில் பி.லோகநாதன், இரா.வெங்கடேசன், சிவ.சண்முகம் மற்றும் இணைப் பேராசிரியர் மு.நளினி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து இரா.கலைக்கோவன் கூறியதாவது: மலைக்கோட்டையின் வடக்குப் பகுதியில் பெரும் பாறை ஒன்றின் மேற்கு முகத்தில் 2.28 மீட்டர் நீளம், 97 சென்டிமீட்டர் உயரம், 32 சென்டிமீட்டர் ஆழத்துக்கு அகழ்ந்து இந்த சிற்பத் தொகுதி செதுக்கப்பட்டுள்ளது. ஐந்து சிற்பங்கள் இடம்பெற்றுள்ள இந்த தொகுதியில், நடுநாயகமாக நீள் செவிகளுடன் அர்த்தபத்மாசனத்தில் இரு கைகளையும் மடிமீது தியான முத்திரையில் வைத்து, முகம் சிதைந்தநிலையில் காட்சிதருபவரை, சிற்பத்தின் அருகிலுள்ள இரு வரி தமிழ்க் கல்வெட்டு சிவ பண்டிதர் எனச் சுட்டிக்காட்டுகிறது.
மழித்த தலையுடன் மார்பில் துணியொன்றை முப்புரிநூல்போல மடித்து அணிந்திருக்கும் இந்த பண்டிதர் அமர்ந்துள்ள தளம் நன்கு சமன்படுத்தப்பட்ட நிலையில் 1.10 மீட்டர் நீளத்தில் உள்ளது. இந்த தளத்தின் இருபுறங்களிலும் பக்கத்துக்கு ஒரு அடியவர் நின்ற கோலத்தில் காட்டப்பட்டுள்ளனர்.
சிவபண்டிதரின் வலப்புறம் உள்ள அடியவர் உருவத்தில் இடுப்புக்குக் கீழ் சிதைக்கப்பட்டிருந்தபோதும் பாதங்கள் பண்டிதர் நோக்கித் திரும்பியிருப்பதைக் காணமுடிகிறது. இடப்புறத்தில் உள்ள அடியவரின் கால்கள் பண்டிதரை நோக்கியபடி இருந்தபோதும் முகம் நேர்ப்பார்வையில் உள்ளது. கைகளைக் கூப்பியுள்ள இவரது இடக்கை சிதைக்கப்பட்டுள்ளது. அணிகலன்கள் ஏதுமற்றவர்களாய் தலை, செவிகளை மறைக்குமாறு துணியாலான தொப்பி போன்ற தலையணியுடன் காட்சி தரும் இந்த இருவரில் இடதுபுறம் உள்ளவரின் முகம் நன்கு செதுக்கப்பட்டுள்ளது.
பண்டிதர் அமர்ந்துள்ள தள முகப்பின் இடப்புறம் நின்ற நிலையில் மிகச் சிறிய வடிவினராய் காட்சி தருபவர் இந்த சிற்பத்தைச் செலுத்தக் காரணமானவர் எனலாம். ஊர்ப் பெருந்தனக்காரராகவோ, அரசு அலுவலராகவோ இவரைக் குறிப்பிடலாம். பண்டிதரை நோக்கிய நிலையில் கைகூப்பி நிற்கும் இவரது இடையாடை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டப்பட்டுள்ளது. இருபுறத்தும் இடைக்சச்சின் முடிச்சுகள் உள்ளன. தலைமுடி கொண்டையாக முடியப்பட்டுள்ளது. தள முகப்பின் இடப்புறம் வலப்பாதி சிதைந்த நிலையில் சிறிய அளவிலான ஆடவர் வடிவம் ஒன்று அர்த்த பத்மாசனக் கோலத்தில் காட்சி தருகிறது.
இந்த சிற்பம் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலச்சோழர் காலத்ததாகக் கொள்ளலாம். திருச்சியில் சிவபண்டிதர் வடிவம் பாறைச் சிற்பமாகக் கிடைத்திருப்பது இதுவே முதல்முறை. மேலும், தலை, செவிகளை மறைக்குமாறு துணியால் ஆன தலையணி அணிந்தவர்களாக அடியவர்கள் காட்சி தருவதும் அரிய வகை சிற்பமாகும் என்றார் கலைக்கோவன்.