செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்
Updated on
2 min read

செம்மரக் கடத்தல் சம்பந்தமாக அப்பாவித் தமிழர்கள் இருபது பேர் சுட்டுப் பொசுக்கப்பட்ட நிகழ்வு, இரண்டு மாநிலங்கள் தொடர்புடையது. எனவே, சிபிஐ விசாரணை மட்டுமே நியாயமான முறையில் நடக்கவும், உண்மை வெளிச்சத்துக்கு வரவும் உதவிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''செம்மரக் கடத்தலில் அரசியல்வாதிகளுக்கும், போலீஸாருக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஏற்கெனவே வெளிப்படையாகச் சொன்ன டிஎஸ்பி தங்கவேலு, இப்போது திடீரென என்ன காரணத்தாலோ முன்பு கூறியதை மாற்றிச் சொல்வதாக நாளேடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது.

ஆனால், செம்மரக் கடத்தல் வழக்கில், பல நாட்கள் தலைமறைவாக இருந்து, கடைசியில் கைது செய்யப்பட்ட, வேலூர் கலால் பிரிவு டிஎஸ்பி தங்கவேலுவை கடந்த 10ஆம் தேதி கைது செய்து, தமிழக - ஆந்திர மாநில எல்லையிலே உள்ள பரதராமி காவல் நிலையத் தில் வைத்து விசாரித்த போது, இதே டிஎஸ்பி தங்கவேலு, அதிமுக பிரமுகர்கள் நான்கு பேர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 11 பேர் உட்பட 37 பேருக்கு தொடர்பு உள்ளது என்று கூறியதாகக் காவல் துறையினர் அப்போது தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநில செம்மரக் கட்டைகள் கடத்தல் பிரிவைச் சேர்ந்த டிஎஸ்பி வெங்கடேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலுவைக் காப்பாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும், "குற்றம் நிரூபிக்கப்படவில்லை" எனக் கூறி வழக்கையே தள்ளுபடி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், இந்த வழக்கில் பல லட்சம் ரூபாய் கை மாறி தங்கவேலுவைக் காப்பாற்றுவதற்கான வேலைகள் நடைபெறுவதாகவும் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.

இதைப்பற்றி நான் கடந்த 15ஆம் தேதி எடுத்துக் கூறி ஆந்திர மாநிலக் காவல் துறை அதிகாரி வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல என்பதால், இதற்கு என்ன விளக்கம் என்று கேட்டிருந்தேன்.

ஆந்திர மாநிலக் காவல் துறை அதிகாரி சாட்டிய குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் தான் நேற்றைய தினம் டிஎஸ்பி தங்கவேலுவிடம் விசாரணை நடைபெற்ற போது செம்மரக் கடத்தலில் அரசியல்வாதிகளுக்கோ, போலீஸாருக்கோ எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தங்கவேலு ஏற்கனவே சொன்னதை அப்படியே மாற்றிச் சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்தே செம்மரக் கடத்தலில் அதிமுக முக்கியப் பிரமுகர்களும், வேறு சில காவல் துறை அதிகாரிகளும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும், அவர்களை யெல்லாம் காப்பாற்றவும், இந்த வழக்கையே திசை திருப்பவுமான முயற்சிகள் வேகமாக நடைபெறுவது நன்றாகத் தெரிகிறது.

எனவே, செம்மரக் கடத்தலில் தங்கவேலு தொடர்பான நிகழ்வுகள் பற்றிய உண்மை உலகத்திற்குத் தெரியவும், குற்றவாளிகள் தப்பிக்காமல் சட்டத்தின் கடுமையான பார்வைக்குக் கொண்டுவரப்படவும், செம்மரக் கடத்தல் வழக்கினை சிபிஐ விசாரிப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், அதிமுக அரசு உடனடியாக இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

செம்மரக் கடத்தல் சம்பந்தமாக அப்பாவித் தமிழர்கள் இருபது பேர் சுட்டுப் பொசுக்கப்பட்ட நிகழ்வு, இரண்டு மாநிலங்கள் தொடர்புடையது என்பதால்,சிபிஐ விசாரிப்பது தான் நியாயமாக இருக்கும் என வலியுறுத்தி வருகிறோம். இப்போது தங்கவேலு தொடர்பானதும், செம்மரக் கடத்தல் என்பதால் சிபிஐ விசாரணை மட்டுமே நியாயமான முறையில் நடக்கவும், உண்மை வெளிச்சத்துக்கு வரவும் உதவிடும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in